

நடிகை கோயல் மாலிக்
கொல்கத்தா: மேற்கு வங்க நடிகை கோயல் மாலிக் இன்று பாஜகவில் இணைந்த பின்னர், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.
கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை கோயல் மாலிக், பாஜகவில் முறைப்படி இணைந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் சஷி அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து, சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் அலுவலகம் சென்ற அவர், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் சுவேந்து அதிகாரி, மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது கோயல் மாலிக், “மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடி, முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு நன்றி. மக்களின் நலனுக்காக பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது எனக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்” என்றார்.
யார் இவர்?
புகழ்பெற்ற வங்க நடிகர் ரஞ்சித் மாலிக்கின் மகள் கோயல் (ருக்மினி) மாலிக். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் (டிஎம்சி) இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் டிஎம்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அக்கட்சியில் இருந்தும் விலகினார்.
இந்தச் சூழலில், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 16-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள இடத்துக்கு நடிகை கோயல் மாலிக் போட்டியிடுவார் என பாஜக நேற்று அறிவித்தது.