

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப் படையில் தற்போது தளபதியாக உள்ள ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் அக்டோபர் 31-ம் தேதியுடன் பணிநிறைவு பெற உள்ளார். இந்த நிலையில் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘தேஜஸ்’ போர் விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானத் திட்டங்களை விமானப் படையில் தீவிரமாக ஊக்குவித்ததில் இவர் முக்கியப் பங்காற்றியவர்.
மிராஜ்-2000, மிக் ரகங்கள், கிரண், ஜாகுவார், ஐஎல்-78, ஹாக் மற்றும் தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்களில் 3,500 மணி நேரத்துக்கும் மேலாகப் பறந்த அனுபவம் கொண்டவர்.
சுமார் நான்கு தசாப்த கால தற்காப்புப் பணியில், கார்கில் போரின்போது நடந்த ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’, ‘ஆபரேஷன் ரக் ஷக்’ மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்ளிட்ட முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் இவர் தீவிரமாகப் பங்காற்றியுள்ளார்.