“அபிஷேக் பானர்ஜியா அல்லது நானா?” - மம்தாவுக்கு கெடு விதித்த கல்யாண் பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி
Updated on
1 min read

புதுடெல்லி: "அபிஷேக் பானர்ஜி வேண்டுமா அல்லது என்னைப் போன்ற ஒரு மூத்த கட்சித் தொண்டர் வேண்டுமா என்பதை மம்தா பானர்ஜி தேர்வு செய்ய வேண்டும்" என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி கெடு விதித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. மம்தா பானர்ஜியின் தலைமை பதவிக்கே ஆபத்து சூழ்ந்துள்ளது.

இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், "நான் மம்தா பானர்ஜியுடன் இருக்கிறேன். ஆனால் அவர் அபிஷேக்குடன் இருக்க வேண்டுமா அல்லது திரிணாமூல் காங்கிரஸுடன் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். மம்தா முதலில் இதனை முடிவு செய்ய வேண்டும்.

அபிஷேக் இல்லாமல் அவரால் கட்சியை நடத்த முடியாது என்றால், நான் அங்கே இருக்க மாட்டேன். நான் டெரெக்கிடம் சொல்லி, மம்தாவிடம் சொல்லச் சொன்னேன். அபிஷேக் பானர்ஜி அல்லது என்னைப் போன்ற ஒரு தொண்டர் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என கூறும்படி சொன்னேன்” என்றார்.

திரிணமூல் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் போலியாக கையெழுத்து பெற்றது தொடர்பாக சிஐடியால் விடுக்கப்பட்ட சம்மனை எதிர்த்து அபிஷேக் பானர்ஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். இன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கவுஷிக் சந்தாவின் விடுமுறைக் கால அமர்வு முன்பு, அபிஷேக் பானர்ஜி சார்பில் வழக்கறிஞர் அயன் பட்டாச்சார்யா ஆஜரானார்.

இது குறித்து பேசிய கல்யாண் பானர்ஜி கூறும்போது "அபிஷேக் பானர்ஜி தொடர்பான எந்தவொரு சட்ட விவகாரத்திலும் இனி ஈடுபடுவதில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன். அவரது தொடர்ச்சியான ஆணவம் கற்பனை செய்ய முடியாதது. நேற்று, நீதிபதி சந்தா தலைமையிலான அமர்வில் நான் இந்த விவகாரத்தை எழுப்பி, அவசர விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தேன். அதன்படி, வியாழக்கிழமை விசாரணை நாளாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நேற்று இரவு, அவர் என் மகனைத் தொடர்புகொண்டு, வியாழக்கிழமை நடைபெறும் விசாரணையில் தனக்காக வாதாட வேறொரு வழக்கறிஞர், சட்டத் துறையில் என்னை விட மிகவும் ஜூனியரான ஒருவர் வருவார் என்று கூறினார்.

எல்லோரும் தமக்குக் கீழே இருப்பவர்கள் என்றும், காமக் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களைப் போல நாங்கள் அனைவரும் வெறும் பணியாளர்கள் என்றும் அவர் நினைக்கிறார். நான் 45 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். உயர் நீதிமன்றத்தை விடுங்கள், உச்ச நீதிமன்றத்தில் கூட என்னை தெரியும். ஆனால் அபிஷேக் மிகவும் ஆணவம் கொண்டவராக மாறிவிட்டார், யாரையும் மதிப்பதில்லை. அதனால்தான் நான் விலகிக்கொண்டேன்” என்று அவர் கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி
‘திக்கற்ற’ திரிணமுல் காங்கிரஸ்... மேற்கு வங்க அரசியலில் மம்தா சறுக்கியது எங்கே?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in