

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜப்பான் பூங்காவில் இன்று சுந்திர காண்ட பாராயணம் நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா, கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுந்தர காண்ட பாராயணம் செய்தனர். இதில், நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கான கையெழுத்து இயக்கத்தை கேஜ்ரிவால் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அவர்கள் நில மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடவுளின் பெயரால் லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் வழங்கிய பணத்தை அவர்கள் திருடி உள்ளனர். ராமர் கோயில் கட்டப்படும்போதே, பெருமளவில் 'கமிஷன்' பெறும் நடவடிக்கைகள் நடந்தன. 40 நாட்களில் 70 திருட்டுச் சம்பவங்கள் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. 8 மாத கால சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். உயர் மட்டத்தில் உள்ளவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் இப்போது அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாகிவிட்டது. ஏனெனில், அவர்களின் சொந்தக் கட்சியினரும், அவர்களுடன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுமே இதில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டுமொத்த அமைப்பும் கொள்ளையர்களையும் திருடர்களையும் பாதுகாப்பதிலேயே ஈடுபட்டுள்ளது.
இன்று நாங்கள் 'சுந்தரகாண்டம்' பாராயணம் செய்துள்ளோம். ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று ஒவ்வொரு பக்தரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும். என தெரிவித்தார்.