

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜக.,வில் இணைந்ததால், அங்கு அதன் பலம் 113-ஆகவும், தே.ஜ கூட்டணியின் பலம் 148-ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராகவ் சத்தா உட்பட 7 எம்.பி.க்கள் விலகி, பாஜக.,வில் இணைந்தனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் 3-ல் 2 பங்கு பேர் பாஜக.வில் இணைந்ததாக எம்.பி.ராகவ் சத்தா அறிவித்தார். இதை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை இணையதளத்திலும் புதிதாக இணைந்தவர்கள் பாஜக எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக.,வில் 7 உறுப்பினர்கள் இணைந்ததால், மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்களின் பலம் 113 ஆகவும் தே.ஜ கூட்டணி எம்.பி.க்களின் பலம் 148-ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. அந்த பெரும்பான்மையை தே.ஜ கூட்டணி நெருங்குகிறது.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு சஞ்சய் சிங், பல்பிர் சிங், என்.டி.குப்தா ஆகிய 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது குறித்து சஞ்சய் சிங் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களின் இணைவு சட்டப்பூர்வமானது அல்ல. மாற்று கட்சியில் இணைய 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை.
அரசியல் சாசன நிபுணர்கள், கபில் சிபல் போன்றோரிடம் ஆலோசித்த பின்பு மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனிடம், கட்சி மாறிய எம்.பி.க்களை அரசியல் சாசனத்தின் 10-வது பிரிவின் படி தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தாண்டு இறுதிக்குள் மாநிலங்களவையில் மேலும் 30 உறுப்பினர்களின் இடங்கள் காலியாகும். அப்போது தங்களுக்கு மேலும் 5 எம்.பி.க்கள் கிடைப்பர் என பாஜக நம்பிக்கையுடன் உள்ளது.