

நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான யோகி அதித்யநாத் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது இதை அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநில கோரக்பூர் தொகுதி எம்.பி. அதித்யநாத் பேசும்போது, ‘நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காக்க வேண்டி நாடு முழுவதும் ஒரே வகையான பொது சிவில் சட்டம் மிகவும் முக்கியம். இதை அமல்படுத்தும் எண்ணம் அரசிடம் உள்ளதா?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ரவிசங்கர் பிரசாத், ‘நாடு முழுவதுக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. இதற்கான வழிமுறைகள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவின்படி உள்ளது. இதன் அடுத்த கட்டமாக அது பற்றி சம்பந்தப்பட்டவர்களுடன் பரந்த ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம்’ என கூறினார்.
இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விஷயமாகக் கருதப்படும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதை தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கைகளிலும் குறிப்பிட்டு வருகிறது பாஜக. இதை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல எனக் கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் வாக்குகளையும் நம்பி அரசியல் செய்யும் காங்கிரஸ், பொது சிவில் சட்டம் பற்றி பேசுவது கிடையாது எனவும் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறும் சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ‘நாட்டின் அனைத்து மக்களும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என எண்ணுகின்றன. இதை அமல்படுத்த அரசு முன்வந்தால், சிவசேனா ஆதரவளிக்கும்’ என்றார்.
காங்கிரஸின் மூத்த தலைவர் கமல்நாத் கூறும்போது: ‘பொது சிவில் சட்டம் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. இதை கொண்டு வந்தால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்’ எனத் தெரிவித்தார்.