

டெல்லி: “மே 28-ம் தேதி நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 28-ம் தேதி நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. முறையான பேச்சுவார்த்தை மூலமாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி செய்ய முடியும். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மே 28-ம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பின்போது மல்யுத்த வீரர்கள் மற்றும் விவசாய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகே போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் ஏற்படுத்தி வைத்திருந்த இரும்பு பேரிகேடுகள் மற்றும் முள்வேலிகளை மீறி அவர்கள் அப்பகுதியில் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷ் மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோரை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.
அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பலரும் கண்டனங்களை தெரிவித்தன. தற்போது தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக பதக்கங்களை கங்கை நதியில் வீசிய ஏறிய வந்த மல்யுத்த வீரர்களிடம் பேசிய உள்ளூர் விவசாயிகள், அவர்களிடமிருந்து பதக்கங்களை வாங்கிக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.