ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க டெல்லி, பஞ்சாப் தலைவர்கள் எதிர்ப்பு: கேஜ்ரிவாலுக்கு கைவிரிக்குமா காங்கிரஸ்?

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி
Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரஸ் நேற்று ஆலோசனை செய்தது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் டெல்லி, பஞ்சாப் தலைவர்கள் அளித்த எதிர்ப்பால், காங்கிரஸ் கைவிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியின் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் மத்திய அரசிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மிக்கு சாதகமான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது காரணமானது.

இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் வரும்போது மாநிலங்களவை அதை புறக்கணிக்க வைக்க ஆம் ஆத்மி திட்டமிடுகிறது. இதற்காக, டெல்லி முதல்வர் அரவிந்த் கேர்ஜிவால், எதிர்க்கட்சித் தலைவர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்தவகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தியையும் சந்திக்க முதல்வர் கேஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். இது குறித்து நேற்று காங்கிரஸ் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

பஞ்சாப் மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உதவ முடியாது எனக் கூறி கைவிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து கூறும்போது, ’நம் இரண்டு கட்சிகளின் கொள்கைகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. இதனால், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது கடினம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸுக்கு கடந்த காலத் தேர்தல்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகி விட்டது. டெல்லியை அடுத்து பஞ்சாபிலும் காங்கிரஸ் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்தது.

அதேபோல், கோவா மற்றும் குஜராத்திலும் ஆம் ஆத்மியால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டிருந்தது. இச்சூழலை வலியுறுத்திய காங்கிரஸின் மாநிலத் தலைவர்கள், ஆம் ஆத்மிக்கு அளிக்கும் ஆதரவால் நான்கு மாநிலங்களில் கட்சி பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

எனினும், இப்பிரச்சனையில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவை தாம் ஏற்பதாகவும் டெல்லி, பஞ்சாப் தலைவர்கள் கூறி உள்ளனர். தேசியத் தலைவரான கார்கே மற்றும் ராகுல் இணைந்து ஆம் ஆத்மி பிரச்சினையில் உடனடியாக முடிவு எடுக்காமல் யோசித்து வருகின்றனர்.

அதேசமயம், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சந்தித்த திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, தேசியவாதக் காங்கிரஸின் சரத்பவார், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் பாரதிய தெலுங்கானாவின் கே.சந்திரசேகர ராவ் ஆகியோரின் ஆதரவை பெற்றுள்ளார்.

எனவே காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு கைவிரிப்பது 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், பாஜகவை நேரடியாக எதிர்க்க முயலும் எதிர்க்கட்சிகள் கூட்டணியிலும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், முதல்வர் கேஜ்ரிவால் பிரச்சனையில் இறுதி முடிவு, எதிர்க்கட்சிகள் கூட்டம் வரை ஒத்தி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ், பாட்னாவில் ஜுன் 12 இல் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்துகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in