Published : 30 May 2023 08:09 AM
Last Updated : 30 May 2023 08:09 AM

மணிப்பூர் மாநில கலவரத்தில் 5 பேர் உயிரிழப்பு: இம்பால் விரைந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா

மணிப்பூர் மாநில முதல்வர், அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.

இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்துக்கு இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் படிப்படியாக இயல்புநிலை திரும்பியது.

இதனிடையே, மேதேயி மற்றும் குகி சமுதாய பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி இரவு பல பகுதிகளில் மீண்டும் கலவரம் மூண்டது. இந்த கலவரம் 28-ம் தேதியும் நீடித்தது. குறிப்பாக செரு மற்றும் சுக்னு பகுதிகளில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் பல்வேறு குடியிருப்புகளை தீயிட்டு கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.

உரிபோக் பகுதியில் பாஜக எம்எல்ஏ வைராக்பம் ரகுமணியின் இல்லம் தாக்கப்பட்டதுடன் அங்கிருந்த 2 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் போலீஸார் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநில முதல்வர் பிரேன் சிங் நேற்று முன்தினம் கூறும்போது, “பல்வேறு கிராமங்களில் புகுந்த தீவிரவாதிகள், எம்-16 மற்றும் ஏகே-47 ரக துப்பாக்கிகள் மூலம் பொதுமக்களை சுட்டுள்ளனர். அங்கு ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது” என்றார்.

ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு பகுதிகளில் நடமாடும் வாகன சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு நேற்று மாலை சென்றார். 3 நாள் பயணமாக சென்றுள்ள அவர் அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேதேயி மற்றும் குகி சமூகத்தினர் அமைதி காக்க வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x