மகளிர், குழந்தைகள் உரிமை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம்: மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிசீலனை

மகளிர், குழந்தைகள் உரிமை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம்: மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிசீலனை
Updated on
1 min read

தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி பரிசீலித்து வருகிறார்.

இதற்கான சட்டத்திருத்தம் வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த இரு ஆணையங்களும் தற்போது எடுக்கும் நடவடிக்கைகள், வெறும் நோட்டீஸ் அளித்து பதில் பெறும் நிலையில் மட்டுமே உள்ளதாகவும், இதற்கு மேல் மாநில அரசுகள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆணையங்களுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “தேசிய மகளிர் ஆணையத்திற்கு, தேசிய குழந்தைகள் உரிமை ஆணை யத்தை விடக் குறைந்த அதிகாரமே உள்ளது. இவ்விரு ஆணையங்களுக்கும் சிவில் நீதிமன்றத்துக்குரிய அதிகாரம் வழங்கலாம் என்று பிரதமருக்கு மேனகா பரிந்துரைத்துள்ளார். இதன்படி, ஆணையங்கள் தங்கள் உத்தரவை மதிக்காதவர்கள் மீது கைது வாரண்ட் பிறப்பிக்க முடியும்” என்றனர்.

இவ்விரு ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆளும் கட்சிகளால் நியமிக்கப் படுகின்றனர்.

இதனால் ஆட்சி மாறும்போது அவர்கள் பதவி விலகுவதும், ஆணையங்களின் நடவடிக்கைகள் மீது உள்நோக்கம் கற்பிப்பதும் வழக்கமாக உள்ளது. எனவே இதற்கு முடிவு கட்டும்வகையில், ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு 3 ஆண்டுகள் நிரந்தர பதவிக்காலம் நிர்ணயிக்கவும் மேனகா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்காக பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் யோசனைகளை மேனகா வரவேற்க இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பை தனது அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in