Last Updated : 29 May, 2023 07:49 AM

 

Published : 29 May 2023 07:49 AM
Last Updated : 29 May 2023 07:49 AM

செங்கோல் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் மோடி செயல்பட வேண்டும்: வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி கருத்து

கோப்புப்படம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோலை நிறுவுவதற்காக தமிழகத்தின் சைவ ஆதீனங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முக்கியமானவரான 18-வது குருசபையில் திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி, செங்கோலின் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் நரேந்திர மோடி செயல்பட வேண்டும் என்பதே தங்கள் அவா என, ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்திற்கு பின் மீண்டும் நீங்கள் அனைவரும் டெல்லியில் மத்திய அரசால் கவுரவிக்கப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்?

தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த கவுரவம். நீதி, நேர்மை, சமத்துவத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. தேசிய அளவில் மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய நல்ல நிகழ்வாக செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் உங்கள் பங்கு என்ன? குறைகள் எதுவும் இன்றி அவற்றை செய்ய முடிந்ததா?

தமிழகத்தின் 20 ஆதீனங்கள் அழைக்கப்பட்டனர். அலகாபாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட செங்கோல், கங்கையின் புனித நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது. பிறகு, தமிழ் மந்திரங்களை ஓதி, வேத மந்திரங்களை அர்ச்சித்து நம் பாரதப் பிரதமர் மோடியிடம் ஐதீக முறையில் அந்த செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

இதை வேளாக்குறிச்சி, திருவாவடுதுறை, தர்மாபுரம், குன்றக்குடி, திருவண்ணாமலை, பேருர் ஆகிய ஆறு ஆதீனங்களும் பிரதமரிடம் வழங்கினோம். மங்கள வாத்தியம் நாகசுர இசைமுழங்க புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு செங்கோல் எடுத்து வரப்பட்டது. அப்போது திருமறைகளும் ஓதப்பட எங்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் உடன் வந்தார். இந்த நிகழ்ச்சி எந்தவித குறையும் இன்றி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

நேற்று உங்கள் அனைவரையும் பிரதமர் தனது வீட்டிற்கு அழைத்தது பற்றிக் கூற முடியுமா?

எங்கள் அனைவரையும் கவுரவப்படுத்த வேண்டி பிரதமர் தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்போது நாமும் அவருக்கு சில முக்கிய நூல்களை பரிசாக அளித்திருந்தோம். இதில், திருக்குறள், தேவாரம், ஆதீன மடங்களின் வரலாறு, பொது மற்றும் சமய நூல்கள் இடம் பெற்றன. இந்த சந்திப்பில் பிரதமர் தமிழகத்தின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகத் திகழ்ந்தால்தான் நம் நாடு ஒருமைப்பாட்டுடன் திகழும் என வலியுறுத்தினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பன்முகத்தன்மை கொண்ட ஒரே நாடாக இந்தியா விளங்குவதாக பிரதமர் தெரிவித்தார். நம் பாரதத் திருநாடு ஒற்றுமையுடன் விளங்க எங்களுடையப் பிரார்த்தனைகளும், ஆசிகளும் அவசியம் என எங்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

வழக்கமாக ஆட்சியாளர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதே ஆன்மிகவாதிகளுக்கு அழகு என்ற கருத்து உள்ளது. இதற்கு நேர்மாறாக நீங்கள் ஆட்சியாளர்களை தேடி வந்தது ஏன்?

அது பொதுவாகச் சொல்லப்படும் கருத்து. ஆனால், மன்னர்கள் காலத்தில் அவர்களது ராஜகுருவாக விளங்கியவர்கள் சைவ ஆதீனங்கள். அந்தவகையிலே திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் தோன்றியக் காலத்திலேயே எங்கள் குரு முதல்வர், தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா முழுமையிலும் யாத்திரை மேற்கொண்டார். இதில், கொங்கத்து அரசர், தெலுங்குப் புரவலர், கொள்ளாபுர வேந்தர்,குருச்சர் என்றழைக்கப்பட்ட இன்றைய குஜராத், வங்கத்துறைகள் மற்றும் மகததேச மன்னர்கள் எல்லாம் வணங்கி குருவை வாயாற துதிபாடியது 15-ம் நூற்றாண்டின் பிள்ளைத்தமிழில் பதிவாகி உள்ளது. எங்களைப் பொருத்தவரை மத்திய அரசின் அழைப்பின் பேரில் நாடாளுமன்றம் இங்கிருப்பதால் டெல்லிக்கு வந்தோம்.

நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதன் நோக்கம் என்ன?

புதிய நாடாளுமன்றத்தில் கட்டுமானங்கள் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவற்றில் ஒன்றாக தமிழகத்தின் செங்கோல் நிறுவப்படுவது, நீதி, நேர்மை மற்றும் சமத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. செங்கோலின் பொருளுக்கேற்ப மன்னன் நெறி தவறாமல், எல்லாஉயிர்களுக்கும் அரணாக இருக்க வேண்டும். நடுநிலைக்கான அர்ப்பணிப்போடு அவரது ஆட்சி விளங்க வேண்டும் என்பதன் குறியீடாகத்தான் செங்கோல் இன்று நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

நீங்கள் கூறும் இக்குறியீட்டுற்கு ஏற்றவாறு பிரதமர் மோடி செயல்படுகிறார் என நம்புகிறீர்களா?

அவர் அவ்வாறு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் அவா.

சுதந்திரத்தின் போது செங்கோலுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் மீது சந்தேகத்தை கிளப்புபவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

சுதந்திரத்தின் போது செங்கோலுக்கு முக்கியப் பங்கு இருந்தது என்பது நிதர்சனமான உண்மை. இதன் மீதான குறிப்புகள் உள்ளன. செய்திகளும் பல நாளேடுகளில் வெளியாயின.

புதிய கட்டிடத்தில் செங்கோலின் பெயரில் தமிழகத்திற்கு கிடைத்த முக்கியத்துவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

இது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியத்துவம் ஆகாது. இது பாரத தேசம் முழுமைக்கான நல்லவிஷயம். இந்த செங்கோல் மூலம் தேசிய ஒருமைப்பாடும், ஒற்றுமையும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், நம் மூதாதையர்களின் அர்ப்பணிப்பை இந்த இளைய சமுதாயம் உணரவேண்டும். தமிழகத்தின் சுதந்திரப் போராட்டதியாகிகள் முழுமையாக அடையாளப்படுத்தப்படவில்லை. இந்த செங்கோல் மூலமாக அவர்களது வரலாறும் முறையாக நினைவு கோரப்படுவதாக நாம் கருதுகிறோம்.

வழக்கமாக வைணவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாஜக அரசு இந்த விழாவில், சைவ மடங்களுக்கு முக்கியத்துவம் தந்திருப்பது ஏன்?

சைவ மடங்கள் சார்பில் இந்த செங்கோல் வழங்கப்பட்டதால் அதை மறுபுனரமைக்க நாங்கள் மட்டும் அழைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

வட மாநிலங்களின் கும்பமேளாக்களிலும், அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலும் தாங்கள் அழைக்கப்படவில்லை. வட மாநில மடத்துறவிகளின் தர்மசபை கூட்டங்களிலும் ஆதீன மடங்களுக்கு அழைப்பில்லை. இனி அந்தநிலையில் மாற்றம் வருமா?

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆச்சாரியா சபையில் சைவ, வைணவ ஆதீனங்கள் உள்ளிட்ட அனைத்து இந்து சபைபிரிவுகளுக்கும் அழைப்பு வருகிறது. நானும் அதில் ஒருமுறை கலந்து கொண்டு ஆலோசனை அளித்து வந்தேன். அப்போது முதல்வர் எனும் முறையில் மோடி, அமித்ஷா ஆகியோரும் கூட கலந்து கொண்டனர். தனித்து இயங்கும் இந்த ஆச்சாரிய சபைக்கு அம்மாநிலம் ஆதரவளிப்பதால் அதன் கூட்டம் குஜராத்தில் நடைபெறுகிறது. நீங்கள் குறிப்பிடும் நிலையில் மாற்றம் வந்தால் வரவேற்புக்கு உரியது.

தமிழகத்தில் இதுவரை எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இதில் ஆதீனங்களால் ஏன் செங்கோல் கலாச்சாரத்தை நுழைக்க முயலவில்லை?

இதை நாமாகச் செய்வதில்லை. ஆட்சியாளர்கள் அழைப்பு, வேண்டுகோளின் பேரில் நாம் பங்கெடுக்கிறோம். கடந்த 1947 ஐ போலவே இப்போதும் அவ்விதமே நிகழ்ந்தது.

ஆதீனங்களுக்கு மத்திய அரசிடம் தற்போது கிடைத்த மரியாதை தமிழகத்தில் கிடைத்ததில்லை போல் தெரிகிறதே?

தமிழகத்திலும் எங்களுக்கு மரியாதை கிடைக்கிறது. அவர்கள் எங்களை அழைத்து ஆலோசனைகளையும் பெறுவது உண்டு. தற்போதைய தமிழக முதல்வர் கூட கடந்த ஆண்டு எங்களை ஒரு கூட்டத்திற்கு அழைத்து ஆலோசனைகளை பெற்றிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x