

பிஹாரில் நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லாரி ஒன்று, சாலை ஓரத்தில் படுத்திருந்த பக்தர்கள் மீது ஏறியதில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிஹாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில், புது டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று நிலை தவறி, அங்கு சாலை ஓரத்தில் ஓய்வுக்காக படுத்துக்கொண்டிருந்த பக்தர்கள் மீது ஏறியது. தொடர்ந்து அந்த கண்டெய்னர், பக்தர்கள் வந்த பேருந்து மீதும் மோதியது. இந்த பயங்கர விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த 12 பேரும் உயிரிழந்தனர். மேலும் பேருந்தினுள் இருந்த 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
பக்தர்கள் அனைவரும், ஜார்கண்டில் உள்ள தியோகர் கோவிலுக்கு சென்று திரும்பிய வழியில், ஓய்வெடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவுரங்காபாத் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , படுகாயமடைந்த பக்தர்கள் அனைவரும் கயா மருத்துவமனை மற்றும் மகத் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.