சென்னை ஐஐடி-ல் ரகசியமாக எம்டெக் முடித்த ஆப்கன் மாணவி

மாணவி பெகிஸ்தா
மாணவி பெகிஸ்தா
Updated on
1 min read

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதன்பிறகு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டது.

இதன்காரணமாக ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சர் இ போல் பகுதியை சேர்ந்த மாணவி பெகிஸ்தா கைருதீனின் உயர் கல்வி பாதிக்கப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டுக்கு முன்பு சென்னை ஐஐடி-ல் எம்டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர பெகிஸ்தா விண்ணப்பித்தார். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த அவருக்கு ஐஐடி-ல்சேர இடம் கிடைத்துள்ளது. ஆனால் சேர முடியவில்லை.

மாணவியின் நிலையை அறிந்த பேராசிரியர் ரங்கநாதன் ரங்கசுவாமி உதவிக்கரம் நீட்டினார். சென்னை ஐஐடி நிர்வாகத்துடன் பேசிய அவர் ஆன்லைன் வாயிலாக மாணவி பெகிஸ்தா கல்வி பயில ஏற்பாடு செய்தார். தற்போது அவர் வெற்றிகரமாக எம்டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து பெகிஸ்தா கூறியதாவது: எனது தாய் மருத்துவர். தந்தை பட்டதாரி. எனது அக்கா இந்திய ஐஐடி-ல் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். எனது தம்பி பட்டப்படிப்பு பயின்று வருகிறார். எனது தங்கை சட்டம் பயின்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஜோஸ்ஜன் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்ற எனக்கு சென்னை ஐஐடி-ல் எம்டெக் படிப்பில் சேர இடம் கிடைத்தது. அதற்குள் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் சென்னை ஐஐடி-ல் சேர முடியவில்லை. பேராசிரியர் ரங்கநாதன் ரங்கசுவாமி ஆன்லைனில் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்தார்.

முதல் 2 செமஸ்டர்கள் மிகவும் கடினமாக இருந்தன. எனினும் இரவு பகலாக விடாமுயற்சியோடு படித்தேன். சுயமாக ஆங்கில அறிவை வளர்த்து கொண்டேன். ஐஐடி ஆய்வக வசதியை பெற முடியாததால் வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தை உருவாக்க எனது பேராசிரியர் பசவராஜா மடிவாளா குரப்பா அறிவுறுத்தினார்.

அதன்படி எனது அக்காவிடம் இருந்து சமையலுக்கு பயன்படுத்தும் மைக்ரோவேவ் ஓவனை பெற்றேன். நகைக்கடையில் இருந்து டிஜிட்டல் ஸ்கேல் மற்றும் குடுவைகளை வாங்கி வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தை ஏற்படுத்தினேன். அந்த ஆய்வகத்தில்தான் பயிற்சி பெற்றேன்.

அதிவேக இணைப்பு இல்லாத வைபை, சாதாரண லேப்டாப் ஆகியவற்றின் மூலம் எனது எம்டெக் படிப்பை நிறைவு செய்துள்ளேன். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்று பட்டம் பெற விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை. அடுத்து பிஎச்டி படிக்க விரும்புகிறேன்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் வீட்டுச் சிறையில் இருந்தாலும் என்னை போன்று தடைகளைத் தாண்டி வீட்டில் இருந்தே படிக்க அறிவுறுத்துகிறேன். இவ்வாறு மாணவி பெகிஸ்தா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in