Last Updated : 25 Oct, 2017 11:36 AM

 

Published : 25 Oct 2017 11:36 AM
Last Updated : 25 Oct 2017 11:36 AM

சூடுபிடிக்கிறது குஜராத் தேர்தல் களம்: பாஜகவுக்கு சவால்; கட்டாயத்தில் காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் தொடங்கி விட்டது. தேர்தல் தேதி அறிவிப்பே, சர்ச்சையில் தொடங்கியுள்ளது. குஜராத்தில் வாக்காளர்களைக் கவரும் வகையில், நலத்திட்டங்களை பிரதமர் அறிவித்து முடிக்கும் வரையில், தேர்தல் ஆணையம் காத்திருப்பதாக புகார் கூறுகிறது எதிர்கட்சியான காங்கிரஸ்.

ஆனால் தேர்தல் பிரசாரம் இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது. குஜராத்தில், இந்த மாதத்தில், மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சியில் இருப்பதால், பாஜக முழு வீச்சில் மக்களை கவரும் வகையில், பல திட்டங்களை அறிவித்து வருகிறது.

1995-ல் பாஜக குஜாரத்தில் முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது. சங்கர் சிங் வகேலாவின் கலகத்தால் ஆட்சியை இழந்தாலும், பின்னர், 1998-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அன்று தொடங்கி இன்று வரை, அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து வந்துள்ளது பாஜக. காங்கிரஸால், பாஜகவை அசைத்துப் பார்க்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், பாஜக என்பதையும் தாண்டி, மோடியின் மீதான ஈர்ப்பு என்றே கூற வேண்டும்.

குஜராத்தில் 2001-ல் முதல்வராக பதவியேற்ற மோடி, 2014-ல் பிரதமராக பதவியேற்கும் வரை, அப்பதவியில் தொடர்ந்தார். 14 ஆண்டுகாலம் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். ஆனால், மோடி பிரதமர் பதவியேற்ற பின்னர், குஜராத்தில் பாஜகவுக்கு தலைவலி தொடங்கியது. இடஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில், படேல் சமுகத்தினர் நடத்தியப் போராட்டம், மாட்டு இறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் மக்கள் மீதான தாக்குதல், வேலைவாய்ப்பு மற்றும் விவசாய பாதிப்புக்காக, பிற்பட்ட சமூகத்தினர் நடத்திய போராட்டம் என அடுத்தடுத்து குஜராத் அரசை பிரச்னைகள் உலுக்கின.

சவால்களை சாதுர்யமாக கையாளும் திறன் இல்லாததால் முதல்வர் பதவியில் இருந்த ஆனந்தி பென் படேல் மாற்றப்பட்டு, விஜய் ரூபானி புதிய முதல்வரானார். எனினும், போராட்டங்கள், மக்கள் எதிர்ப்பு போன்றவை, அம்மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்தது. ஆளும் பாஜக சரிவை சந்தித்தது.

பாஜகவுக்கு கவுரவ பிரச்னை

இந்த சூழலில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு. இந்த தேர்தல் முன்பு போல எளிது அல்ல; இதை பாஜக நன்கு உணர்ந்துள்ளது. எனவேதான் பல மாதங்களுக்கு முன்பே அரசியல் களத்தை சமன் படுத்தும் முயற்சியில் இறங்கியது.

ஒரு காலத்தில், பாஜகவில் இருந்து விலகி, மோடியை கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் சி்ங் வகேலாவுக்கு வலை வீசப்பட்டது. அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சி தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேலை தோற்கடிக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்தது. காங்கிரஸில் இருந்து சங்கர் சிங் வகேலா ஆதரவு எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டுப்போட்டும், இறுதியில் அகமது படேல் வெற்றி பெற்றார்.

இதனால் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தை கவனத்துடன் அணுகுகிறது பாஜக. பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் இந்தத் தேர்தல் கவுரவப் பிரச்சனை. சொந்த மாநிலத்தில் சறுக்கல் ஏற்பட்டால், அது, அரசியலிலும், சொந்த கட்சியிலும் பிரச்னையை ஏற்படுத்தும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.

அதனால், பிரதமர் மோடி தலைமையில் பாஜக முழு மூச்சில் களம் இறங்கியுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என, அக்கட்சி ஆட்சி நடத்தும் பல மாநில முதல்வர்களும் பிரச்சார களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். குஜராத்தில் மொத்தமுள்ள, 182 இடங்களில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறார் அமித் ஷா.

காங்கிரஸுக்கு கட்டாயம்

இது ஒரு புறம் என்றால் மறுபுறம் காங்கிரஸும் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. குலாம் நபி ஆசாத், அகமது படேல், சச்சின் பைலட் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் குஜராத்தில் முகாமிட்டு பணியாற்றி வருகின்றனர்.

படேல் சமூக இடஒதுக்கீடு போராட்ட குழு தலைவர் ஹர்திக் படேலை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதுபோலவே, குஜராத் பிற்பட்டோர் சமூகத் தலைவரும், குஜராத் ஷத்ரிய தாக்குர் சேனா தலைவர் அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருடன் ஆயிரக்கணக்கானோரும் காங்கிரஸில் இணைந்தனர். இதன் மூலம் குஜராத்தில், 40 சதவீத அளவில் உள்ள பிற்பட்ட சமூகத்தினரை ஈர்க்க முடியும் என காங்கிரஸ் நம்புகிறது. அதுபோலவே தலித் சமூக தலைவர் ஜெகதீஷ் மிவானியின் ஆதரவை பெறவும் காங்கிரஸ் முயன்று வருகிறது. புதிய ஆதரவு காங்கிரஸுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 125 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிறார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத் சிங் சோலங்கி.

உத்தரப் பிரதேசத்தில் பெற்ற வெற்றியை போல, குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், டெல்லி, பிஹார் மாநில தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வியை காங்கிரஸ் நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மாநிலங்களில், பாஜகவுக்கு மாற்று மற்ற கட்சிகள் தான். பிஹாரிலும், உத்தரப் பிரதேசத்திலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், குஜராத் தேர்தல் களம் வித்தியாசமானது. பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி நிலவும் மாநிலம். இங்கு வெற்றி பெறுவது பாஜவுக்கு கவுரவ பிரச்னை. காங்கிரஸுக்கும், ராகுல் காந்திக்கும் வலிமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x