பிரிஜ் பூஷனை சிறைக்கு அனுப்ப வேண்டும்: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாபா ராம்தேவ் ஆதரவு

பாபா ராம்தேவ் | கோப்புப் படம்
பாபா ராம்தேவ் | கோப்புப் படம்
Updated on
1 min read

ராஜஸ்தான்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் மூன்று நாட்கள் நடைபெறும் யோகா சிவிர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாபா ராம்தேவிடம் மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பாபா ராம் தேவ், "இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளும், நீதி கிடைக்காமல் மல்யுத்த வீராங்கனைகள் இன்னமும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருவதும் தேசத்துக்கு அவமானம்.

இத்தனைக்கும் இடையே பிரிஜ் பூஷன் நாளும் ஏதேனும் அபத்தங்களை பேசி வருகிறார். அவர் நம் தேசத்தில் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களை அவமதிக்கிறார். அவரைப் போன்றோரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவருடைய செயல்கள் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் நான் என் கருத்தை மட்டுமே சொல்ல முடியும். அவரை நான் கைது செய்ய இயலாது.

என்னால் எல்லாக் கேள்விகளுக்கும் அரசியல் பார்வையுடன் பதில் சொல்ல முடியும். நான் ஒன்றும் அறிவிலி இல்லை. நான் மதிநுட்பம் நிறைந்தவனே. இந்த தேசத்திற்காக எனக்கு ஒரு பார்வை உண்டு. ஆனால் நான் அரசியல்ரீதியாக கருத்துச் சொன்னால் அது திரித்து கூறப்படுகிறது. ஒரு பிரளயமே ஏற்படுத்தப்படுகிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in