எனது நாடாளுமன்றம், எனது பெருமை - புதிய நாடாளுமன்ற வீடியோவை பகிர பிரதமர் அழைப்பு

எனது நாடாளுமன்றம், எனது பெருமை - புதிய நாடாளுமன்ற வீடியோவை பகிர பிரதமர் அழைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்குடன் புதிய நாடாளுமன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றது. அதன்பிறகு இந்தியா முழுவதும் ஆங்கிலேய ஆட்சி சுவடுகளின் அடையாளத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை, லோக் கல்யாண் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குடியரசு தின விழாவின் பாசறை திரும்பும் அணிவகுப்பில் ஆங்கிலேயர்களின் பாடல் நீக்கப்பட்டு, இந்திய பாடல் சேர்க்கப்பட்டது. அந்தமான்-நிகோபர் தீவில் ஆங்கிலேயர் பெயர்களில் இருந்த தீவுகளுக்கு சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட இந்திய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் கொடி மாற்றி அமைக்கப்பட்டது.

ஆங்கிலேயர் சுவடுகள் நீக்கம்: இந்த வரிசையில் ஆங்கிலேயர் கால சுவடுகளை நீக்கும் வகையில் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

புதிய நாடாளுமன்றத்தின் வெளிப்புற, உட்புற தோற்றம் குறித்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்டார். வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ள செய்கிறது. வரலாற்று சிறப்புமிக்க புதிய நாடாளுமன்றத்தின் கம்பீரம், அழகு வீடியோவில் பிரதிபலிக்கிறது. இந்த வீடியோவை அதிகம் பகிர வேண்டுகிறேன். அதில் உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள். எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டாக்கை மறக்காமல் பதிவிட்டு வீடியோவை அதிகமாக பகிருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in