

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், கல்வியாளர்கள் உட்பட 270 பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திரமோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த விழாவை புறக்கணிப்பதாக 20 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதற்கு, முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் உட்பட 270 பிரபலங்கள் கையெழுத்து பிரச்சாரம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்களில் 88 ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், 10 முன்னாள் தூதர்கள், 100 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், 82 கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா, இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமைமிக்க தருணம்’’ என்ற தலைப்பில் முன்னாள் தூதர் பஸ்வதி முகர்ஜியின் தலைமையில் கையெழுத்திடப்பட்டு வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அக்கறையுள்ள இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகமற்ற எதிர்க்கட்சிகளை கண்டிக்கிறோம். இந்தியர்களாக நாட்டுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் துணை நிற்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்வை புறக்கணித்து எதிர்கட்சியினர் தெரிவித்துள்ள கருத்துக்கள், வீணானது, முதிர்ச்சியற்றது, கேலிக்கூத்தானது, ஜனநாயக மற்றது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய பிரதமர், தனது தொலைநோக்கு வியூகத்தால் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதை கவர்ந் துள்ளார்.
இது காங்கிரஸ் மற்றும்இதர எதிர்கட்சியினருக்கு வெறுப்பாக உள்ளது. 2023 பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுதலைவர் திரவுபதி முர்முவின் உரையை புறக்கணித்தவர்கள்தான், இன்று அவரே புதிய நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும் என கூறுகின்றனர்.
இவ்வாறு கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.