Published : 07 Oct 2017 09:46 AM
Last Updated : 07 Oct 2017 09:46 AM

அருணாச்சலில் விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் 7 வீரர் பலி

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள தவாங் நகருக்கு அருகில் நேற்று காலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. இதில் விமானப் படையின் 2 விமானிகள் உள்ளிட்ட 5 பேரும் 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

எம்ஐ-17 வி5 ரகத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. மலைப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளுக்கு வீரர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்ல இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப் படை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்திய விமானப் படை தினம் நாளை (அக். 8) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தராகண்ட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட இதே ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சமீபத்திய ஆண்டுகளில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ ஜெட் விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது குறித்து விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா நேற்று முன்தினம் கூறும்போது, “அமைதிக் காலங்களில் நமக்கு ஏற்படும் இந்த இழப்புகள் மிகுந்த கவலைக்குரியது. விபத்துகளை குறைக்கவும் நமது சொத்துகளை பாதுகாக்கவும் தீவிர கவனம் செலுத்தப்படும்” என்றார். இந்நிலையில் மறுநாளில் இந்த விபத்து நடந்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x