Published : 25 May 2023 09:20 PM
Last Updated : 25 May 2023 09:20 PM

“புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப விரைவு நடவடிக்கைகள்” - பிரதமர் மோடி பேச்சு

காணொளி மூலம் அசாம் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றும் பிரதமர் மோடி

புதுடெல்லி: "20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போன்ற விரைவான இந்த சகாப்தத்தில், நாட்டு மக்கள் விரைவான முடிவுகளை விரும்புகின்றனர். அதற்கேற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 25) காணொலி மூலம் அசாம் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: "அசாம் மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். கடந்த மாதம் பிஹு தினத்தன்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். அசாமிய கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதற்கான அடையாளமாக இருந்த அந்த மாபெரும் நிகழ்ச்சியின் நினைவுகள் இன்னும் எனது மனதில் பசுமையாக இருக்கிறது.

இன்றைய வேலைவாய்ப்பு முகாம், அசாமில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த தீவிர அக்கறையின் பிரதிபலிப்பாகும். இதற்கு முன்பும், அசாமில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்று சுமார் 45 ஆயிரம் இளைஞர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. இந்த இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.

அசாம் மாநிலம் அமைதி மற்றும் வளர்ச்சியில் புதிய சாதனையை எட்டி வருகிறது. இந்த வளர்ச்சியின் வேகம் அசாமில் நேர்மறையான தாக்கத்தையும் சிறந்த உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்புகளை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற அசாம் அரசு செயல்முறைகளை தொடங்கியுள்ளது. பல்வேறு துறைகளில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மேற்கொள்ள ‘அசாம் மாநில நேரடி ஆட்சேர்ப்பு ஆணையம்’ உருவாக்கப்பட்டது.

ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு விதிமுறைகள் இருந்ததாலும், தேர்வு எழுதுபவர்கள் வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு தேர்வுகளுக்குத் தயாராக வேண்டியிருந்ததாலும் முந்தைய செயல்முறை சிக்கல் நிறைந்ததாக இருந்தது. இதனால் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை. இந்த செயல்முறைகள் அனைத்தும் இப்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைக்காக அசாம் அரசை பாராட்டுகிறேன்.

விடுதலையின் அமிர்த காலத்தில் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துள்ளோம். அடுத்த 25 ஆண்டுகால அமிர்த காலம் மிக முக்கியமானது. பணிகளில் நியமனம் பெற்றவர்கள் நல்ல நடைமுறைகள், சிறந்த சிந்தனை, பொதுமக்களின் மீதான அக்கறை ஆகியவற்றை முக்கியமாக கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும். புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் ஒவ்வொரு சாதாரண மக்களுக்கும் அசாம் அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். சமூகம் விரைவாக மாறி வருகிறது. எந்தவொரு நபரும் வளர்ச்சிக்காக காத்திருக்க விரும்பவில்லை.

20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போன்ற விரைவான இந்த சகாப்தத்தில், நாட்டு மக்கள் விரைவான முடிவுகளை விரும்புகின்றனர். அதற்கேற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அரசு ஊழியர்களுக்கு உள்ள பொறுப்புகள் முக்கியமானவை. பணி நியமனம் பெற்றவர்கள் இதே அர்ப்பணிப்புடன் முன்னோக்கி பயணிக்க வேண்டும். புதிய விசயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சமூகத்தையும் நிர்வாக அமைப்பையும் மேம்படுத்துவதற்கு பங்காற்ற முடியும்.

இந்தியாவின் உள்கட்டமைப்பை அதிவேகமாக நவீனமயமாக்குவதற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. புதிய நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு புதிய உள்கட்டமைப்பு திட்டத்தாலும், ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் மற்றும் சுயவேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணக்கியல் ஊழியர்கள், தொழிலாளர்கள், பல்வேறு வகையான உபகரணங்கள், எஃகு, சிமெண்ட் போன்றவை, விமான நிலையங்களின் வளர்ச்சிக்கு தேவை.

ரயில் பாதைகள் விரிவாக்கம் மற்றும் மின்மயமாக்கல் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், சுமார் 4 கோடி பாதுகாப்பான வீடுகளை அரசு கட்டி , கழிப்பறை வசதிகள், எரிவாயு இணைப்பு, குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்ற வசதிகளுடன் அந்த வீடுகளை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இந்த வீடுகளை கட்டுவதற்கும், இந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கும் உற்பத்தித் துறையினர், சரக்குப்போக்குவரத்துத் துறையினர், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்றோர் சிறந்த பங்களிப்புகளை வழங்குகின்றனர்.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. நாட்டில் பல புதிய மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் 3 மருத்துவக் கல்லூரிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தேன். கடந்த சில ஆண்டுகளில் அசாமில் பல் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவத் துறையுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைப்பதாகவும் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற நிலை இல்லை. நாட்டில் லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பு உதவியிருக்கிறது. விவசாயம், சமூக நிகழ்ச்சிகள், கணக்கெடுப்பு, ஆய்வுப்பணிகள், பாதுகாப்புத் துறை செயல்பாடுகள் போன்றவற்றில் ஆளில்லா விமானங்களான ட்ரோன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான கைப்பேசிகளை உற்பத்தி செய்வது, இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் சுயசார்பு இந்தியா இயக்கத்தை வலுப்படுத்தும். ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் வகையில், அகண்ட அலைவரிசை இணைப்பு விரிவுபடுத்தப்படுகிறது. இது பெரிய அளவில் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பை ஊக்குவித்துள்ளது. ஒரு திட்டம் அல்லது ஒரு சிறந்த முடிவு மட்டுமே மக்களின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போதைய அரசின் கொள்கைகளை விளக்கியப் பிரதமர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மைய நீரோட்டத்திற்கு வந்துள்ளனர். வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. புதிய இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் விரைவான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது" என்று பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x