Published : 25 May 2023 08:02 AM
Last Updated : 25 May 2023 08:02 AM

வரலாறு | நேருவிடம் செங்கோல் ஒப்படைத்த ஆதீனம்

செங்கோலுடன் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். சுதந்திரத்தின்போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டனால் வழங்கப்பட்டது இந்த செங்கோல் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல்: அமித் ஷா தகவல்

நேருவிடம் செங்கோல் ஒப்படைத்த ஆதீனம்: ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, சோழர் கால மாதிரி செங்கோலை ஒப்படைக்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியிடம் ஒப்படைத்தார் ஜவஹர்லால் நேரு. இதையடுத்து இந்த விழாவுக்கான திட்டங்களை ராஜாஜி தீட்டினார். செங்கோலை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு ஆன்மிக தலைவர் யாரை அழைக்கலாம் என ராஜாஜி எண்ணியபோது, அவரது நினைவுக்கு வந்தவர் திருவாவடுதுறை ஆதீனம். உடனடியாக திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்ட ராஜாஜி, செங்கோலை ஒப்படைக்கும் விழாவை நடத்திக் கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார்.

இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக திருவாவடுதுறை ஆதீனம் கூறினார். நள்ளிரவில் சுதந்திரம் பெறுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக இந்த சம்பிரதாயங்கள் நடந்தன. முதலில் செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த குரு, மவுன்ட்பேட்டனிடம் வழங்கினார். பின்பு அது திரும்ப பெறப்பட்டது. அதில் கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிரதமராக பொறுப்பேற்கும் ஜவஹர்லால் நேருவிடம் கொண்டு செல்லப்பட்டது.

ஜவஹர்லால் நேருவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, அவரிடம் சோழர் கால மாதிரி தங்க செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த குரு வழங்கினார். அதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்டார்.

திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், சோழர் காலத்து மாதிரி தங்க செங்கோலை
நேருவுக்கு வழங்கிய போது எடுத்த படம். படங்கள்: தி இந்து ஆவணகாப்பகம்

சோழர் கால மரபுப்படி கடந்த 1947-ம்ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.45 மணிக்கு தேவாரத்தில் கோளறு பதிகத்தில் உள்ள 11 பாடல்களை பாடுமாறு ஆதீனம் கூறியிருந்தார். அதன்படி வேயுறு தோளிபங்கன் எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலின் கடைசி அடியான, ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடித்தனர். அப்போது, ஆட்சி அதிகாரம் மாற்றத்தை குறிக்கும் வகையில் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், தங்க செங்கோலை நேருவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழக இந்து அறநிலையத் துறை கொள்கை குறிப்பிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நினைவுகூர்ந்த ‘மகா பெரியவர்’ - ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதில் செங்கோல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு மிக முக்கியமானது. ஆனால், அது வரலாற்றில் முக்கிய அம்சமாக இடம் பெறவில்லை. கடந்த 1978-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சி ஒன்றில், இந்த செங்கோல் கதையை எடுத்துக் கூறினார் அப்போதைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் ‘மகா பெரியவர்’ என அழைக்கப்பட்டார். இந்த கருத்து இவர் கடந்த 1994-ம் ஆண்டு முக்தி அடைந்தபின் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இடம் பெற்றது. அதன் பின்பு இது பற்றிய செய்திகளும், படங்களும் ஊடகங்களில் அதிகம் வெளியாயின. இது குறித்த கட்டுரை துக்ளக் இதழில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வெளியானது.

இந்த கட்டுரையை பிரபல நடன கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார். வரலாற்றில் மறைக்கப்பட்டு, மக்களுக்கு தெரிவிக்கப்படாத இந்த செங்கோல் வழங்கப்பட்ட புனிதமான வரலாற்று நிகழ்வை 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஊடகங்களில் வெளியான செய்தியை மத்திய அரசு சரிபார்த்து, தற்போது செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x