2047-க்குள் இந்தியா உலகின் முதல்நிலை நாடாக உருவெடுக்கும்: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

2047-க்குள் இந்தியா உலகின் முதல்நிலை நாடாக உருவெடுக்கும்: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்
Updated on
1 min read

புதுடெல்லி: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் முதல்நிலை நாடாக உருவெடுக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் நிறுவனத் தந்தையாகக் கருதப்படுபவரும் அதன் முதல் தலைவருமான கே.எஃப். ருஸ்தாம்ஜியின் நினைவு சொற்பொழிவில் பங்கேற்று ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். அவரது உரை விவரம்: "நாட்டின் வளர்ச்சிக்கு நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை இடைவிடாது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதால்தான் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

நாட்டில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதேபோல், பாதுகாப்புப் படை வசம் உள்ள ஆயுதங்கள், வசதிகள் எவ்வாறு மேம்பட்டுள்ளன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன் கண்டிராத வளர்ச்சியை நாடு தற்போது கண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி இனி தடைபடாது. வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலகிற்கு தலைமை வகிக்கும்.

பொருளாதாரத்தில் உலகின் 11-வது பெரிய நாடாக இருந்த இந்தியா, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் 5-வது பெரிய நாடாக உருவெடுத்தது. நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி நாம் இந்த இடத்தைப் பிடித்துள்ளோம். இவை அனைத்தும் சாத்தியமாகி இருப்பதற்கு நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதே காரணம்." இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in