‘ஈகோ என்னும் செங்கற்களால் கட்டப்படவில்லை...’ - நாடாளுமன்ற விவகாரம் குறித்து ராகுல் காந்தி 

ராகுல் காந்தி | கோப்புப்படம்
ராகுல் காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: "நாடாளுமன்றம் ஈகோ என்னும் செங்கற்களால் கட்டப்படவில்லை, மாறாக அது அரசியலமைப்பு விழுமியங்களால் கட்டப்பட்டது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் புதன்கிழமை தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியில் உள்ள அந்தப் பதிவில் அவர், "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவில்லை என்றாலோ அல்லது அந்த நிகழ்வுக்கு அவரை அழைக்கவில்லை என்றாலோ அது நாட்டின் மிக உயர்வான அரசியலமைப்பு பதவிக்கான அவமானமாகும்.

நாடாளுமன்றம் என்பது ஈகோ என்னும் செங்கற்களால் கட்டப்படவில்லை, மாறாக அரசியலைப்பு விழுமியங்களால் அது கட்டப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையில் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் இன்று காலை தனது ட்விட்டர் பதிவில், ராகுல் காந்தி முதலில் தனது சொந்தக் கட்சியினரை மதிக்க கற்றுக்கொள்ளட்டும் என்று தெரிவித்திருந்தார். அவர் அந்தப் பதிவில்,"ராகுல் காந்தி ஆணவத்தில் அன்று அவசரச் சட்டம் ஒன்றை கிழித்தெறிந்தார், இன்று அவர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்கும் போது குடியரசுத்தலைவர் பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிறார். அரசியலமைப்பு முன்னுரிமைகளைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, ராகுல் காந்தி முதலில் தன்னுடைய கட்சியினரையும் மூத்தவர்களையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளட்டும்" என்று தெரிவித்திருந்தார். ஜெய்வீர் ஷெர்கில், கடந்தாண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார்.

முன்னதாக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, மதிமுக, விசிக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமனற திறப்பு விழாவினை புறக்கணிக்கப்போவதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in