மகாராஷ்டிராவில் விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த டாக்டர் தம்பதி: 11 பேர் பயனடைந்தனர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிராவில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை டாக்டர் தம்பதி தானம் செய்தனர். இதன் மூலம் 11 பேர் பயனடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் நகரைச் சேர்ந்தவர்கள் டாக்டர் தம்பதிகளான வினீத் தண்டவதே மற்றும் சுமேதா. இவர்களுடைய மகன் சாகேத் தண்டவதே (30) பெங்களூருவில் உள்ள டிஜிட்டல் செயலி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இருசக்கர வாகனம் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாகேத், கடந்த 15-ம் தேதி புனே நகரிலிருந்து பெங்களூருவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

சித்ரதுர்கா நகருக்கு அருகே சென்ற சாகேத் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை, அவ்வழியாகச் சென்ற ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் சாகேத் தம்பதிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனிடையே, மூளையில் படுகாயமடைந்த சாகேத்தை பெங்களூருவில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் கடந்த 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) விரார் நகர தலைவரான டாக்டர் வினீத் மற்றும் கண் மருத்துவரான சுமேதா தம்பதி தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இந்த முடிவுக்கு சாகேத் மனைவியும் மென்பொறியாளருமான அபூர்வாவும் ஒப்புக் கொண்டார். 5 மாதத்துக்கு முன்புதான் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, சாகேத்தின் சிறுநீரகம், கல்லீரல், கண், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 11 பேர் பயனடைந்ததாக ஐஎம்ஏ மகாராஷ்டிரா செயலாளர் டாக்டர் சந்தோஷ் கதம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in