

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்கள் இந்திய பொதுத் துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றனர்.
இத்தகைய மோசடிகளை தடுக்கும் வகையில், வங்கிகள் கடன் வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்தபடி உள்ளது.
இந்நிலையில், பொதுத் துறை வங்கிகளில் ரூ.50 கோடிக்கு மேல் கடன் கேட்கும் நிறுவனங்கள் மீது பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு புகார் உள்ளதா என்பதை பரிசோதித்து 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு அறிக்கை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகள் ரூ.50 கோடிக்கு மேல் கடன் வழங்கும்போது, அவை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது மோசடி வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பிடம் (சிஇஐபி) அறிக்கை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கையை 15 தினங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கென்று பொதுத் துறை வங்கிகளுக்கு தனி மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துத் தகவல்களும் மின்னஞ்சல் மூலமாகவே பகிரப்படும். இதனால், வங்கிகள் தாங்கள் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது ஏதேனும் மோசடி வழக்குகள் உள்ளதா என்பதை குறுகிய கால அளவில் தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.