

சங்குரூர்: கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் நெருங்கிய உறவினர் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் என முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப்பின் சங்குரூர் மாவட்டத்தின் திர்பா மற்றும் சீமா ஆகிய பகுதிகளில் அரசு அலுவலக வளாகங்கள் கட்டுவதற்கு முதல்வர் பகவந்த்மான் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இரண்டு நாட்களுக்கு முன் தரம்சாலா சென்றிருந்தபோது, பஞ்சாப் அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரரை சந்தித்தேன்.
அவர் பஞ்சாப் தேர்வாணையம், அதிகாரி பணிகளுக்கு நடத்திய போட்டித் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அவரால் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. தேசியளவில் விளையாடி உள்ளதால், விளையாட்டு வீரருக்கான இட ஒதுக்கீட்டில் வேலைபெற முடிவு செய்தார். முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் ஆட்சி காலத்தில், அவருக்கு வேலைஅளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அமரிந்தர் சிங் ராஜினாமாவுக்குப்பிறகு சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். இதையடுத்து அந்த விளையாட்டு வீரர் சரண்ஜித் சிங் சன்னியை சந்தித்து வேலை கேட்டுள்ளார். அவர் தனது நெருங்கிய உறவினர் புபிந்திர் சிங் ஹனியை பார்க்கும்படி கூறியுள்ளார். புபிந்தர் சிங் ஹனி ரூ.2 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் எனது அரசு 29,000-க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை மெரிட் அடிப்படையில் வழங்கியுள்ளது. கோதுமைக்கான விலை மதிப்பை மத்திய அரசு குறைப்பது கண்டனத்துக்குரியது. பஞ்சாப் விவசாயிகளின் கடின உழைப்பு இல்லாமல், மத்திய அரசு தனது உணவு தானியகிடங்குகளை நிரப்ப முடியாது. தேசிய உணவு கிடங்குகளை நிரப்ப கோதுமை மற்றும் அரிசியை மத்திய அரசு கோரும்போது, விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட விலை குறைப்பு வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
பஞ்சாப் விவசாயிகளிடம் மத்திய அரசு வேறுபாட்டுடன் நடந்து கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற மோசமான முடிவுகளால், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் கடுமையாக பாதிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.