

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்வராக சித்தராமையா கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். இதையடுத்து புதிய எம்எல்ஏக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி பெங்களூரு, சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் நேற்று விதானசவுதா வளாகத்தை சுற்றி வந்து கோமியத்தின் மூலம் சுத்தம் செய்தனர். மேலும் மந்திரித்த எலுமிச்சை பழங்களை 4 மூலைகளிலும் வீசி எறிந்தனர். இதையடுத்து அர்ச்சகர்களைக் கொண்டு ஆட்சி நிலைக்க பூஜையும் செய்தனர்.
இந்த பூஜை மேற்கொண்ட மண்டியா மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் சிவகுமார் கூறுகையில், “பாஜகவின் ஊழல் ஆட்சியால் கர்நாடக சட்டப்பேரவை கட்டிடத்தின் புனிததன்மை கெட்டுவிட்டது. இத்தனை ஆண்டுகளாக இங்கிருந்த அசுத்த சக்தியை விரட்டுவதற்காக இந்த பூஜையை மேற்கொண்டுள்ளோம். அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் தர்மம் செழிக்கவும் பிரார்த்தனை செய்தோம்” என்றார்.
அமைச்சரின் பேச்சால் அதிருப்தி: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
காங்கிரஸ் மேலிடம் அளித்த ரகசிய வாக்குறுதிகளின் அடிப்படையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.
சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என தகவல் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீலிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''சித்தராமையா 5 ஆண்டுகளுக்கும் முதல்வராக நீடிப்பார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வேறொருவர் முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இல்லை. அதிகார பகிர்வு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் எதுவும் தெரிவிக்கவில்லை'' என்றார்.
இந்த பதிலால் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அவர் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.