

இம்பால்: உள்ளூர் சந்தையில் இடப் பிரச்சினை காரணமாக, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டது.
மணிப்பூரில் 64 சதவீதமாக இருக்கும் மேதேயி சமுதாய மக்கள் மலைப் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதி இல்லை. மலைப் பகுதிகளில் குக்கி இன பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்நிலையில் மேதேயி சமுதாய மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குக்கி பழங்குடியினர் மணிப்பூரின் பல பகுதிகளில் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் மேதேயி மற்றும் குக்கி பழங்குடியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் ஒய்ந்து மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிய நிலையில், தலைநகர் இம்பாலில் மீண்டும் இரு சமூதாயத்தினர் இடையே நேற்று மதியம் மோதல் ஏற்பட்டது. நியூ செக்கான் என்ற இடத்தில் உள்ள சந்தையில் இடப்பிரச்சினை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டது. கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து இங்கு பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.