Published : 03 Oct 2017 09:59 AM
Last Updated : 03 Oct 2017 09:59 AM

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய கீதா பெற்றோரிடம் சேர உதவினால் ரூ.1 லட்சம் வெகுமதி:வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு

பாகிஸ்தானில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பிய பேச்சு மற்றும் செவித் திறனற்ற கீதா, தனது பெற்றோருடன் சேர உதவுவோருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சுஷ்மா நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘‘ஒரு பெண் தனது பெற்றோரை கண்டறிவதில் உதவுவதை விட சிறந்த செயல் வேறு இருக்க முடியாது. உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் ஒரு குடும்பத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் பேச்சு மற்றும் செவித் திறனற்ற ஒரு பெண் இருந்து, அப்பெண் காணாமல் போயிருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும். நாங்கள் ரூ.1 லட்சம் வெகுமதி தருகிறோம்” என்று கூறியுள்ளார்.

கீதா கடந்த 2015 அக்டோபரில் இந்தியா திரும்பினார். தற்போது இந்தூரில் ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ளார். கீதாவின் பெற்றோருக்கு சுஷ்மா விடுத்துள்ள வேண்டுகோளில், “சில நேரங்களில் கீதா உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். உங்கள் மகளை ஏற்றுக்கொள்ளுங்கள். அவள் உங்களுக்கு சுமையாக இருக்க அனுமதிக்க மாட்டோம். அவரது படிப்பு, திருமண செலவை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கீதா 7 அல்லது 8 வயதில் பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்தில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக இருந்ததை கண்டு, அங்குள்ள தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது இயற்பெயர் குட்டி. தொண்டு நிறுவனம்தான் கீதா என்ற பெயரை சூட்டியது. பேச்சுத் திறனற்ற பாகிஸ்தான் சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் சேர கதாநாயகன் உதவுவதுபோல் ‘பஜ்ரங்கி பைஜான்’ என்ற படம் வெளியான பிறகே கீதாவின் கதை வெளியுலகுக்கு தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x