‘லவ் ஜிஹாத்’ குறித்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்ஐஏ

‘லவ் ஜிஹாத்’ குறித்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்ஐஏ
Updated on
1 min read

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் அகிலா என்னும் ஹாதியா வழக்கில், அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளத்தின் கோட்டயம் நகரில் மருத்துவக் கல்வி முடித்த 24 வயதான பட்டதாரி இளம் பெண் அகிலா என்னும் ஹதியா. முஸ்லிம் இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இவர் கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாமுக்கு மாற்றப்பட்டதாக சந்தேகப்பட்ட அவரின் பெற்றோர், கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர். தங்களுடன் இருந்தால் மட்டுமே அகிலாவால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கோரினர். 2016 ஜனவரியில் உயர் நீதிமன்ற அமர்வு அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்தது. வயது வந்த அவரால், தான் யாருடன் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்று அந்த அமர்வு சுட்டிக்காட்டியது.

2016 ஆகஸ்டில் பெற்றோர் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். இதற்கிடையே ‘சத்யசாரணி’ என்ற இஸ்லாமிய அமைப்புடன் சேர்ந்து வாழத் தொடங்கினார் அகிலா. அந்த அமைப்பு வலதுசாரி இயக்கம், ஆனால் அரசால் தடை செய்யப்படாதது. வேறு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது. அந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது ஷெஃபி ஜஹான் என்பவருடன் நீதிமன்றம் வந்த அகிலா, அவரைத் திருமணம் செய்துகொண்டுவிட்டதாகக் கூறினார்.

ஆனால் ‘அந்தத் திருமணம் வெறும் நாடகம், தனக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் அளவுக்கு அவர் முதிர்ச்சி அடையவில்லை, பெற்றோருடன் இருப்பதுதான் அவருக்கு நல்லது’ என்று இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆணையிட்டது.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை மணந்துகொண்டவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மையை விசாரிக்குமாறு தேசியப் புலனாய்வு முகமை’யை (என்.ஐ.ஏ.) பணித்தது.

இதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டில் இருந்து அகிலா என்னும் ஹாதியாவிடம் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ அதிகாரிகள் முயன்றனர். ஆயினும் அவரிடம் இருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய மூத்த என்ஐஏ அதிகாரி, ''பெண்ணின் தந்தை, 'அகிலா விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை' என்று தெரிவித்துள்ளார். இதனால் அகிலாவை இன்னும் விசாரிக்க முடியவில்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம்.

இதற்கிடையே மற்ற ஏராளமான பெண்களிடம் பேசியபோது மற்ற மதத்துப் பெண்களை இஸ்லாமுக்கு மாற்றும் வேலைக்கான 'முறைப்படுத்தப்பட்ட முயற்சி' மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து என்ஐஏ எந்த முடிவுக்கும் வரவில்லை'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in