Last Updated : 20 May, 2023 04:27 PM

16  

Published : 20 May 2023 04:27 PM
Last Updated : 20 May 2023 04:27 PM

“சர்ச்சையில் சிக்காமல் இருப்பதன் காரணம் இதுதான்...” - ஆளுநர் இல.கணேசன் சிறப்புப் பேட்டி

பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...

தமிழகத்தில் இருந்து வட கிழக்கில் உள்ள மணிப்பூருக்கு ஆளுநராகச் சென்றீர்கள். தற்போது நாகாலாந்து ஆளுநராக இருக்கிறீர்கள். வட கிழக்கு வாழ்க்கை எப்படி இருக்கிறது?

"ஆளுநராக நான் மணிப்பூருக்குச் செல்வதற்கு முன், வட கிழக்கு மாநிலங்கள் குறித்த எனது கண்ணோட்டம் வேறு. அங்கு சென்ற பிறகு அது முற்றிலுமாக மாறிவிட்டது. மணிப்பூரைப் பொறுத்தவரை, அங்குள்ள பள்ளத்தாக்கில் வாழக்கூடிய மக்களில் பெருவாரியானவர்கள் மைத்திஸ். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். குறிப்பாக கிருஷ்ண பக்தர்கள். கிருஷ்ண லீலா நடனத்தை ஆடாமல் எந்த நிகழ்ச்சியையும் முடிக்க மாட்டார்கள். மிகுந்த மதப்பற்றாளர்கள். அவர்களுக்கென பிரத்யேக மந்திரங்கள் உள்ளன. அவற்றைச் சொல்வதற்கென ஆட்கள் இருக்கிறார்கள். மலைப்பகுதியில் வாழக்கூடியவர்களுக்கு குகிஸ் என்று பெயர். இவர்களில் 23-27 பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனி மொழி, தனி உடை, தனித்துவமான வீடு என அவர்களுக்குள் நிறைய தனித்துவம் இருக்கிறது. அவர்கள் அடிப்படையில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். மைத்திஸுக்கும் குகிஸுக்கும் இடையே சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நினைக்கிறேன்.”

தங்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மைத்திஸ் மக்களின் கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

“அவர்களுக்கு எஸ்டி அந்தஸ்து கொடுக்க மாநில அரசே தயக்கம் காட்டி வருகிறது. இத்தனைக்கும் மாநில முதல்வர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், எஸ்டி அந்தஸ்து கொடுக்கலாம் என நீதிமன்றம்தான் சொல்லியது. தற்போது உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டது. யார் எஸ்டி, யார் எஸ்டி அல்ல என சொல்வது நீதிமன்றத்தின் வேலையல்ல என உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. நான் நாகாலாந்து வந்துவிட்டாலும்கூட, மணிப்பூர் சம்பவம் என் மனதை ரொம்பவும் பாதித்துவிட்டது. என்றாலும், அங்குள்ள அரசு அதனைச் சரி செய்துவிடும்.”

நாகாலாந்து பற்றி சொல்லுங்கள்? ஆளுநராக அங்கு உங்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது?

“மணிப்பூரைப் போன்றது அல்ல நாகாலாந்து. இங்கு 90 சதவீத மக்கள் கிறிஸ்தவர்கள். 10 சதவீதம் வந்தேறிகள். நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்து வியாபாரம் செய்பவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். நான் இருக்கக்கூடிய தலைநகர் கோஹிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 100 பேர் இருக்கிறார்கள்; மலையாளிகள் 200 பேர் இருக்கிறார்கள். பரப்பளவில் நாகாலாந்து சிறிய மாநிலம். மக்கள் தொகை என்று பார்த்தால் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அளவுக்குத் தான் இருக்கும்.

நமது அரசியல் சாசனத்தில் ஒரு மாநிலத்திற்கு குறைந்தபட்சம் 60 சட்டமன்றத் தொகுதிகளைக் கொடுக்கலாம் என்ற வரையறை உள்ளது. அதனால்தான் சிறிய மாநிலங்கள் பலவற்றுக்கும் 60 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாகாலாந்தில் 60, மணிப்பூரில் 60, மிசோராமில் 60, அருணாச்சலப் பிரதேசத்தில் 60, சிக்கிமில் 60 என சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை அரசியல் சாசன ஏற்பாடு. நாகாலாந்திற்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் என்பது அதிகம். ஆனால், ஒரு மாநிலம் என இருக்க வேண்டுமல்லவா?”

நாகாலாந்தில் எத்தகைய சவால்களை அரசு எதிர்கொள்கிறது?

“நாகாலாந்தில் மத ரீதியிலான பிரச்சினை கிடையாது. அங்குள்ள மக்கள் மற்ற மதத்தவர்களின் வழிபாட்டு முறைகளை, வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஆதரிக்கிறார்கள். மதம் சார்ந்த பிரச்சினைகள் இல்லையென்றாலும், தேசியத்தை ஏற்பதில் வட கிழக்கில் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. அவர்களிடம் தேசிய உணர்வை ஏற்படுத்துவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். இப்போதும்கூட பலர், நாங்கள் இந்தியாவோடு இணைந்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்கிறார்கள். தாங்கள் தனி என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.

இதற்காக ஆயுதம் ஏந்தி போராடியதில் அவர்கள் வீணாகிப்போய்விட்டார்கள். வீணாகிப்போய்விட்டார்கள் என்பதற்கு சரியான அர்த்தம் நாகாலாந்தில் முன்னேற்றம் என்பது மிகவும் குறைவு. உங்களுக்கு ஒரு ஆச்சரியமான செய்தி. நாகாலாந்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கிடையாது. இதுபற்றி நான் கேட்டேன். அப்போது, இந்த வருடம் தொடங்கப்போவதாகக் கூறினார்கள். இதையடுத்து, நாகாலாந்து சட்டப்பேரவையில் நான் பேசும்போது இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என குறிப்பிட்டேன். மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்களைச் சேர்க்க அனுமதி கிடைத்துள்ளது. முதல்முறையாக தற்போதுதான் நகாலாந்தில் ஒரு மருத்துவக் கல்லூரி வர இருக்கிறது. அந்த மாநிலத்தின் நிலை என்ன என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

உயர் நீதிமன்றம் இன்னும் வரவில்லை. அசாம் உயர் நீதிமன்றத்தின் கிளைதான் இருக்கிறது. உயர் நீதிமன்றத்தைக் கொண்டு வருவதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைய இருக்கின்றன. உயர் நீதிமன்றத்தைக் கொண்டு வர மத்திய அரசிடம் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

நாகாலாந்தில் கல்வி அறிவு 64 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. ஆனாலும்கூட இன்னும் கொஞ்சம் அதிகமாக முன்னேறணும். தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவை இருக்கின்றன. அவை இன்னும் அதிகமாக வேண்டும். சாலைப் போக்குவரத்தைப் பொருத்தவரை, போதுமான அளவு சாலை வசதிகள் இல்லை. தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகாலாந்தில் உள்ள திமாப்பூர், நமது மதுரையைப் போல முக்கியமான ஓர் ஊர். தலைநகர் கோஹிமாவிற்கு அருகில்தான் திமாப்பூர் உள்ளது. கோஹிமாவில் இருந்து திமாப்பூருக்கு சாலை மார்க்கமாக ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம். கோஹிமாவில் விமான நிலையம் கிடையாது. திமாப்பூரில்தான் விமான நிலையம் உள்ளது.

சாலை வசதிகள் போதுமான அளவு இல்லாததால் ஓர் ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல 7 மணி நேரம், 8 மணி நேரம் ஆகும். மக்கள் கஷ்டப்பட்டுத்தான் செல்கிறார்கள். சாலை வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் நிலைமை சீக்கிரத்தில் மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு, ராஜ்பவனிலேயே ஒரு ஹெலிகாப்டர் இருக்கிறது. வெளியே செல்வதாக இருந்தால் ஹெலிகாப்டரில் செல்லலாம் என்பார்கள். ஆனால், நான்தான் சாலை வசதி நன்றாக உள்ள இடங்களுக்குச் சாலையிலேயே செல்லலாம் என்று கூறிவிடுவேன். எனக்கு திமாப்பூருக்கு அடிக்கடி போக வேண்டி இருக்கும். சாலை மார்க்கமாகத்தான் போவேன். நாகாலாந்திற்கு தற்போது ரயில் சேவை வந்துள்ளது. ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் மேம்பட்டுவிட்டால் மாநிலம் முன்னேற்றமடைந்துவிடும்.”

நாகாலாந்தில் உள்ள ஆயுதமேந்திய குழுக்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன?

“நாகாலாந்தில் ஆயுதமேந்திய கும்பல்களுக்கு, தலைமறைவு கும்பல் என்றே பெயர். என்னைப் பார்க்க வேண்டும் என்று அவர்களிடம் இருந்து செய்தி வந்தது. எனக்கு ஆச்சரியம். தலைமறைவு இயக்கத் தலைவர்கள் எப்படி ஆளுநரை சந்திக்க முடியும் என்று கேட்டேன். அது ஒன்றும் தவறு இல்லை என சொன்னார்கள். அதன்பிறகு சந்தித்தேன். நாங்கள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டோம்; இனி ஆயுதமேந்த மாட்டோம் என சொன்னார்கள். இந்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும், இந்த விவகாரத்தை கையாளும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்கள். அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்த கோரிக்கைகளை ஏற்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும்.”

எம்மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்?

“அவர்கள் அவர்களின் கண்ணோட்டத்தில் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.”

தனி நாடு கேட்கிறார்களா?

“நாகாலாந்தை பிரித்து மேலும் சில மாகாணங்களை உருவாக்கக் கோருகிறார்கள். அப்போதுதான் வளர்ச்சி கூடும் என அவர்கள் கூறுகிறார்கள். நான் அவர்களிடம் சொன்னேன், எத்தகைய வளர்ச்சி கூடும் என கருதுகிறீர்களோ அதை பட்டியல் போட்டுக் கொடுங்கள். அந்த வளர்ச்சிக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றேன். அதோடு, எம்.பி. எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட வேறு சில கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.”

தனி மாகாண கோரிக்கை என்பது நிலப்பரப்பு சார்ந்ததா அல்லது இனக்குழுக்கள் சார்ந்ததா?

“நாகாலாந்தில் பல குழுக்கள் பலவித கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். சிலர் தனி கொடி வேண்டும், தனி அரசியல் சாசனம் வேண்டும் என்கிறார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தியன் என்று சொன்னால் அதற்கு இருக்கும் மரியாதையே வேறு. அந்த மரியாதை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், நான் இந்தியன் அல்ல; நாகாலாந்தைச் சேர்ந்தவன் என்று சொன்னால், அது என்ன நாகாலாந்து என கேட்பார்கள். அதுமட்டுமல்ல; நாகாலாந்து என்பது இயற்கையாகவே இந்திய நாட்டின் ஒரு பகுதி. அது உங்களுக்கு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. நாகாலாந்தின் கலாச்சாரத்தை பின்பற்றிக்கொண்டே நீங்கள் இந்தியராக இருக்க முடியும். நான் இந்தியன்; அதேநேரத்தில் தமிழன். அதேபோல், நீங்களும் நான் இந்தியன்; அதேநேரத்தில் நாகாலாந்தைச் சேர்ந்தவன் என கூறிக்கொள்ள முடியும் என்றேன். நாகாலாந்தின் தனித்தன்மையை அரசோ அல்லது வேறு யாருமோ குறைக்கப்போவதில்லை என்பதையும் எடுத்துக் கூறினேன்.“

நாகாலாந்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று மீண்டும் முதல்வராக நெய்பியூ ரியோ தேர்வாகி இருக்கிறார். அங்கு அரசியல் எப்படி இருக்கிறது?

“நாகாலாந்தில் தற்போது எதிர்க்கட்சியே கிடையாது. ஒவ்வொருவரும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார மாட்டோம் என்கிறார்கள். நாகாலாந்தின் முதல்வர் ரியோ 5வது முறையாக முதல்வராகி இருக்கிறார். அனுபவம் வாய்ந்தவர். அனைவருக்கும் ஆதரவாக இருப்பவர். இந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால் மற்ற எல்லாமே சரியாகிவிடும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் கொல்கத்தாவுக்குச் செல்வதாக இருந்தால் இந்தியாவுக்குச் செல்கிறேன் என்பார்கள். அவர்கள் மேல் தவறு இல்லை. அப்படி அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மாறி இருக்கிறது. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் அவர்கள் சாதாரணமாகச் சென்று வருகிறார்கள்.

எபிவிபி அமைப்பு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஒரு நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் 100 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களை 10-10 பேராக பிரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி, அங்கே அவர்களை அங்குள்ள நண்பர்களின் வீடுகளில் தங்க வைத்து அவர்களோடு பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இந்த ஆண்டு அவ்வாறு சென்று வந்தவர்களை நான் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அவர்களின் அனுபவம் குறித்து கேட்டேன். நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த மாநிலம் நல்ல நிலைக்கு வந்துவிடும். பிரிவினைவாதம் போன்ற பழைய கதைகள் இனி இருக்காது.

நாகாலாந்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை கிறிஸ்தவர்கள்தான் நடத்துகிறார்கள். நான்கூட சமீபத்தில் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றேன். கல்லூரி விழா ஒன்றுக்கும் சென்றேன். கிறிஸ்துமஸ் விழாவிலும் பங்கேற்றேன். என் வாழ்வில் நான் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றது இதுதான் முதல்முறை.”

நாகாலாந்தில் எது உங்களுக்கு ஆச்சரியம் அளித்தது?

“நாகாலாந்தில் சில விசித்திரமான நிகழ்வுகள் நடக்கும். தலைமறைவு இயக்கம் என்று சில இயக்கங்களுக்குப் பெயர். தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் அறிக்கை கொடுத்தால் அதனை தமிழ்நாட்டில் பத்திரிகைகள் பிரசுரிக்காது. ஆனால், தலைமறைவு இயக்கத்தின் தலைவர் அறிக்கை என்றே நாகாலாந்தில் பத்திரிகைகள் பிரசுரிக்கும். சின்ன சின்ன தலைமறைவு இயக்கங்கள் இருக்கின்றன. இன்ன கோரிக்கையை இந்த தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பார்கள். பத்திரிகைகளும் அவற்றை பெரிய செய்திகளாக பிரிசுரிப்பார்கள். முழு அடைப்பும் வெற்றிகரமாக நடக்கும்.”

அப்படியானால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம். இல்லையா?

“இல்லை. அச்சம் இருக்கிறது. மீறி வந்தால் கொன்றுவிடுவார்களோ என்று உயிருக்குப் பயந்து வெளியே வராமல் இருப்பார்கள்.”

அப்படியானால் அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் அல்லவா?

“ஆயுதம் ஏந்துவதால்தான் முழு அடைப்பு வெற்றி பெறுகிறது. ஆனாலும், அரசு பேச்சுவார்த்தை நடத்தி முழு அடைப்பு நடக்கவிடாமல் செய்துவிடும். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து சென்றதால், இதுபோன்ற குழுக்கள் அரசை மிரட்டுவதைப் பார்க்கும்போது விசித்திரமாக இருக்கும். அவர்களின் பின்னணியில் பெரிய சக்தி இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிய சக்தி கிடையாது. ஆனாலும், ஒரு சம்பவம் போதுமே. ஒரு வீட்டை கொளுத்தினாலோ, ஒரு பேருந்தை கொளுத்தினாலோ அதுவே போதுமே. அதுவே அவர்களுக்கு வெற்றி.

நாகாலாந்தில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அங்கு சகஜம். உதாரணமாக சாலை போடுவதற்கு ஒரு ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு அவர் வேலையைத் தொடங்கினால், அங்கு 10 பேர் சென்று பணம் கொடுத்தால்தான் வேலையைத் தொடங்க விடுவோம் என மிரட்டுவார்கள். இதுபோன்ற சம்பவங்களால் முன்னேற்றத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. மணிப்பூரிலும் நாகாலாந்திலும் இது சகஜமாக இருக்கிறது. அதனால்தான் சாலைப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. நான்கூட கேட்டேன். என்னப்பா, எத்தனை வருடமாக சாலை போடுவீர்கள் என்று? ஆனால், இதுதான் காரணம்.

நல்ல செய்தி என்னவென்றால், அங்கு மக்கள் வாக்களிக்கச் செல்வது மிக அதிகம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் 60 சதவீதம் வாக்குப் பதிவானாலே அது நல்ல சதவீதம் என சொல்கிறோம். ஆனால், தற்போது மணிப்பூரில் தேர்தல் நடந்தபோது 84 சதவீதம் வாக்கு பதிவானது. முதல்வர் நின்ற தொகுதியில் 94 சதவீதம் வாக்குப்பதிவு. இது எதைக் காட்டுகிறது என்றால், ஓட்டு போட்டு மாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது.

மற்றபடி, இயற்கை வளம் நிறைந்த இடம். மக்கள் தங்கள் பாரம்பரியத்திற்கு மிகுந்த மதிப்பளிக்கிறார்கள். மணிப்பூரிலும், நாகாலாந்திலும் மக்கள் குறிப்பாக பெண்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றவில்லை. பாரம்பரியமான உடையைத்தான் அணிவார்கள். சாதாரண பெண்கள் என்றில்லை, விஐபி பெண்களாக இருந்தாலும் அப்படித்தான் உடை உடுத்துவார்கள். பாரம்பரிய உடைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.”

மேற்கு வங்கத்தின் பொறுப்பு ஆளுநராகவும் சில காலம் இருந்திருக்கிறீர்கள். அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உடனான உங்களது அனுபவம் எப்படி இருந்தது?

“தற்காலிகமாக அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் எனக்கு இதயத்தில் சின்ன பிரச்சினை ஏற்பட்டு, சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். அப்போது, அதிக சுற்றுப் பயணம் மேற்கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி நான் சிகிச்சை முடிந்ததும் மணிப்பூர் சென்றுவிட்டேன். பின்னர் மணிப்பூருக்கும், கொல்கத்தாவுக்குமாக மாறி மாறி சென்று வந்தேன். அது உடல்நிலைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதுபற்றி உள்துறை அமைச்சரிடம் சொன்னேன். அவரும் புரிந்துகொண்டு, ஒரு வாரத்தில் வேறொரு ஆளுநரை மேற்கு வங்கத்திற்கு நியமித்துவிட்டார்.

மேற்கு வங்க பொறுப்பு ஆளுநராக இருந்தபோது, மம்தா பானர்ஜியோடு நல்ல அணுகுமுறை இருந்தது. உதாரணத்திற்கு, கருணாநிதி குறித்த மற்றவர்களின் கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தாலும், நான் அவரிடம் பழகியதில் எனது அனுபவம் வேறு மாதிரி இருந்தது. அரசியலைப் பொருத்தவரை நானும் அவரை மாற்ற முடியாது; அவரும் மாற மாட்டார். அதேபோல், என்னை அவர் மாற்றுவதும் முடியாத விஷயம். ஆனாலும், ஒருவருக்கொருவர் நன்றாகப் பழகினோம். அதேபோல், ஜெயலலிதா குறித்தும் மற்றவர்கள் கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தாலும், எனது அனுபவம் வேறு மாதிரி இருந்தது. 25 வருடங்களுக்கு முன் எங்கள் மகளின் (அதாவது அண்ணன் மகள்) திருமணத்திற்காக அழைப்பு விடுத்தேன். அந்த திருமணத்திற்கு கருணாநிதியும் வந்தார். ஜெயலலிதாவும் வந்தார். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் வந்தார்கள். சிபிஐ, சிபிஎம் கட்சியில் இருந்தும் வந்தார்கள். கிறிஸ்தவ பிரச்சாரகர் தினகரன் சிறப்பு விமானம் மூலம் வந்தார். அப்துல் சமதுவும் வந்தார். லத்தீப்பும் வந்தார். நாம் பழகும் முறையை; பேசும் முறையைப் பொருத்தது அது. உண்மையில் அவர்கள் வந்தது பெருமைக்குரிய விஷயம்.

நான் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநராக இருந்தபோது மம்தா பானர்ஜியின் வீட்டில் காளி பூஜை நடந்தது. அவர் அழைத்தார். அப்போது, கொல்கத்தாவுக்கு எனது அண்ணனும், அண்ணியும் வந்திருந்தார்கள். எனது அண்ணனுக்கு மணிவிழா நடைபெற இருந்த சமயம் அது. நாங்கள் மூன்று பேரும் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குச் சென்றோம். அப்போது, மணிவிழாவுக்கு வருமாறு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் கூறியதும், விழாவுக்கு வருகிறேன் என அவர் கூறினார். மறுநாளே அறிக்கை கொடுத்தார். அதேபோல் சென்னையில் நடைபெற்ற அந்த மணிவிழாவுக்கு வருகை தந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆகியோரும் வந்தார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு நான் எல்லோரிடமும் நட்பு வைத்திருக்கிறேன்.”

சில நேரங்களில் சில ஆளுநர்கள் சர்ச்சைகளுக்குள் சிக்கிவிடுகிறார்கள். நீங்கள் சிக்காமல் இருப்பதன் ரகசியம் என்ன?

“ரகசியம் என்னவென்றால், இதுபோன்ற சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்படும்போது பதில் சொல்ல மறுப்பதுதான். நானும் சர்ச்சையில் சிக்க விரும்பாததும்தான் காரணம்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x