Published : 20 May 2023 05:53 AM
Last Updated : 20 May 2023 05:53 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை ‘கார்பன் டேட்டிங்’ செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி யில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் கியான்வாபி மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2021 ஆகஸ்ட் 18-ம் தேதி 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்பின் நீதிமன்ற உத்தரவின்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த சிவலிங்கத்தின் உண்மையான வயதை கண்டறிய ‘கார்பன் டேட்டிங்' ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஏற்கவில்லை.
ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் சிவலிங்கத்தை ‘கார்பன் டேட்டிங்’ செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, விஸ்வநாதன் அமர்வு முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹபீசா அகமது ஆஜரானார். இந்து பெண்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆஜரானார். மத்திய அரசு, உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “ஒரு தரப்பினர் சிவலிங்கம் என்றும் மற்றொரு தரப்பினர் ஒசுகானா என்றும் வாதிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும்" என்று தெரிவித்தார்.
உயிரினங்களில் கார்பன் உள்ளது. இந்த கார்பனில், கரிமம் 14 எனப்படும் ஐசோடோப் உள்ளது. இதில் இருந்து ‘டேட்டிங்' எனப்படும் காலக்கணிப்பை மேற்கொள்ள முடியும்.
அதாவது ஓர் உயிரினம் காலப்போக்கில் கரிம பொருளாக சிதைகிறது. இதன்படி விலங்கினம், தாவரம் மடிந்த பிறகு கரிம விகித மாற்றத்தை வைத்து அவை எந்த காலத்தை சேர்ந்தது என்பதை கணக்கிட முடியும். இதுவே ‘கார்பன் டேட்டிங்' என்றழைக்கப்படுகிறது.
பாறை, உலோகங்கள் போன்ற உயிரற்ற பொருட்களின் வயதை ‘கார்பன் டேட்டிங்' மூலம் கணிக்க முடியாது. எனினும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தபோது பூஜிக்கப்பட்ட தானியங்கள், மரத்துண்டுகள், உடைகள், கயிறுகள் ஆகியவற்றின் மூலம் ‘கார்பன் டேட்டிங்' செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT