உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு - தமிழரான கே.வி.விஸ்வநாதனுக்கு தலைமை நீதிபதி வாய்ப்பு?
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பிரஷாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். இவர்களில் தமிழரான கே.வி.விஸ்வநாதனுக்கு 2030-ம் ஆண்டில் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு காத்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளுக்கானப் பணியிடங்கள் உள்ளன. இதில் 2 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில் பிரஷாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்றம் அதன் முழு பலத்தை எட்டியுள்ளது.
புதிய நீதிபதிகளில் ஒருவரான பிரசாந்த் குமார் மிஸ்ரா, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர். ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். ஆந்திர பணிக்கு முன் அவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.
மற்றொரு நீதிபதியான கே.வி.விஸ்வநாதன், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் ஆவார். இவரது தந்தை கே.வி.வெங்கட்ராமன் பணியின் காரணமாக தமிழகத்தின் பொள்ளாச்சியில் தனது இளம் வாழ்க்கையை விஸ்வநாதன் தொடங்கினார்.
இங்குள்ள ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளி, அமராவதி சைனிக் பள்ளி மற்றும் உதகை சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படித் துள்ளார். பள்ளிக் கல்விக்கு பின் கோயம்புத்தூரின் சட்டக் கல்லூரியில் 5 வருடம் சட்டம் படித்து பட்டம் பெற்றுள்ளார்.
பிறகு 1988-ல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக தனது பணியை விஸ்வநாதன் தொடங்கினார். சுமார் 10 வருடங்களுக்கு பின் டெல்லி சென்ற இவர், நாட்டின் அட்டர்னி ஜெனரலாக உயர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் ஜூனி யராக சேர்ந்தார்.
பிறகு உச்ச நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் தனியாகவே வழக்குகளை எடுத்து விஸ்வநாதன் நடத்தி வந்தார். இதில் அவர் பெற்ற வெற்றிகள் காரணமாக அவரை மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. 2013-ல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் விஸ்வநாதன் பணியாற்றினார். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த மிகச்சிலரில் விஸ்வநாதனும் ஒருவர் ஆவார்.
நீதிபதி விஸ்வநாதன் இன்னும் பல சாதனைகளை படைக்கவுள்ளார். இதில் குறிப்பாக ஆகஸ்ட் 12, 2030-ல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு இவருக்கு காத்திருக்கிறது. தலைமை நீதிபதி பதவியில் மே 25, 2031 வரை நீடிப்பார். இதன்மூலம் தலைமை நீதிபதி பதவி வகித்த மூன்றாவது தமிழராக அவர் கருதப்படுவார்.
இவரது தந்தை கே.வி.வெங்கட்ராமன், கேரள மாநிலம் பாலக்காட்டின் கல்பாத்தியை சேர்ந்தவர். விஸ்வநாதன் கல்பாத்தியில் பிறந்தாலும், தமிழகத்தில் வளர்ந்து படித்துள்ளார். எனவே, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் பொறுப்பேற்றதை கேரளவாசிகள் அவரை மலையாளி எனவும், தமிழகத்தில் அவரை தமிழராகவும் கருதி கொண்டாடி வருகின்றனர்.
