ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு - ராப்ரியிடம் அமலாக்கத் துறை விசாரணை

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலத்துக்கு நேற்று விசாரணைக்கு வந்த ராப்ரி தேவி.படம்: பிடிஐ
ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலத்துக்கு நேற்று விசாரணைக்கு வந்த ராப்ரி தேவி.படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார்.

அப்போது இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை சிறிது காலத்திற்கு முன் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கத்தை கைப்பற்றியது. மேலும் குற்றத்தின் விளைவாக பெறப்பட்ட ரூ.600 கோடி சொத்துகளை கண்டறிந்தது.

இவ்வழக்கில் லாலுவின் மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் மகளும் எம்.பி.யுமான மிசா பாரதியிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது.

நேரில் ஆஜர்: இந்நிலையில் லாலுவின் மனைவியும் பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியை(68) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை உத்தரவிட்டிருந்தது.

இதை ஏற்று, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராப்ரி தேவி நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராப்ரியின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in