

சண்டிகர்: போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்களை ஹரியாணா போலீஸார் முடக்கியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஹரியாணாவில் இணையமோசடியில் தொடர்புடைய 34,000மொபைல் எண்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு பெறப்பட்ட 20,545 மொபைல் எண்களை முடக்கியுள்ளோம். இவற்றில் பெரும்பாலானவை ஆந்திராவில் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மேற்கு வங்கம், டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சிய சுமார் 14 ஆயிரம் மொபைல் எண்களை மத்திய தொலைத் தொடர்பு துறை மூலம் விரைவில் முடக்க உள்ளோம்.
மாநிலத்தில் இணைய மோசடி தொடர்புடைய அனைத்து மொபைல் எண்களையும் மாநில குற்றப்பிரிவு கண்காணித்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.