பெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்

பெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்
Updated on
2 min read

பெங்களூரில் 6 வயது மாணவி பள்ளி ஊழியர்களால் பலாத்காரம் செய்ய‌ப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள மாரத்த ஹள்ளியில் ‘விப்ஜியார்' என்ற தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு 6 வயது சிறுமி முதல் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை அவரது பெற்றோர் திங்கள் கிழமை ம‌ருத்துவமனைக்கு அழைத் துச் சென்றனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த அவரது பெற் றோர் கடந்த செவ்வாய்க்கிழமை மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத் தில் புகார் செய்தனர். ஆனால் போலீ ஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து புதன் கிழமை பள்ளிக்கு சென்ற மாணவி யின் பெற்றோர், இந்த கொடூர சம்ப வம் குறித்து முறையிட்டுள்ளனர்.

‘இதுபோன்ற சம்பவங்கள் எங்களுடைய பள்ளியில் நடக்க வாய்ப்பே இல்லை' என்று கூறிய பள்ளி நிர்வாகம் அவர்களை வெளியே அனுப்பிவிட்டது. விரக்தி அடைந்த சிறுமியின் பெற்றோர் வியாழக்கிழமை உறவினர்களுடன் வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:

“பள்ளியில் பணியாற்றும் இரு ஊழியர்கள், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். பள்ளிக்கு அவப் பெயர் ஏற்படும் என்பதால் பள்ளி நிர்வாகம் மறைக்க முயல்கிறது. இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என பெற்றோ ரையும் மிரட்டியுள்ளனர்” என்று குற்றம் சாட்டினர்.

சிசிடிவி காட்சிகள்

பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் வெளியே வந்த பள்ளி நிறுவனர் ருஸ்தம் கரவள்ளா, 'இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறிழைத்தவர்களை தூக்கிலிட வேண்டும்.பள்ளி நிர்வாகம் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும். குற்றவாளிகளை அடையாளம் காண பள்ளியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அடங்கிய சிடியை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.

பள்ளி வளாகத்தில் பலாத்காரம்

இதுகுறித்து பெங்களூர் மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியதாவது:

'முதல்கட்ட விசாரணையில் பலாத்கார‌ சம்பவம் பள்ளி வளாகத்தில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

எதிர்க்கட்சிகள் அமளி

கர்நாடக சட்டமன்றத்தில் பா.ஜ.க., ம.ஜ.த. கட்சிகளின் உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பினர்.

“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பலாத்கார சம்பவங்களையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் தடுக்க தவறியதால் உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களுக்குப் பதில் அளித்துப் பேசிய க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா,' 'கர்நாடகத்தில் தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. காவல்துறையினர் குற்றம் இழைத்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் .இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெறுமனே பிரச்சினையை பெரிதாக்காமல் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும்'' என்றார்.

இந்த விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in