

புதுடெல்லி: தீவிரவாதிகள் - போதை கடத்தல்காரர்கள் - தாதாக்கள் தொடர்பு சம்பந்தப்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பைச் (என்ஐஏ) சேர்ந்த அதிகாரிகள் நேற்று 6 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் போதை கடத்தல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் குஜராத், கேரள மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் தீவிரவாதிகள் போதைக் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் பல்வேறு சட்டவிரோத தாதா கும்பலும் சேர்ந்து செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு என்ஐஏ 3 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
அதன் அடுத்தகட்டமாக ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை அனைத்தும் மாநில போலீஸாருடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு மொகாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத் துறை தலைமை அலுவலகம் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி தீபக் ரங்கா என்பவரை கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கனடாவில் உள்ள தீவிரவாதி லக்பிர் சிங் சந்து (எ) லண்டா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் சந்து (எ) ரிண்டா ஆகிய இருவருடன் தீபக் ரங்காவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் விநியோகம், அதன் மூலம் கிடைக்கும் நிதி, ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள், கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் என பல வகைகளில் தீவிரவாதிகளும் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் தாதாக்களும் ஒருவருக்கு ஒருவர் சங்கிலி போன்ற இணைப்பில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகளின் 19 தலைவர்களை என்ஐஏ இதுவரை கைது செய்துள்ளது.