

சண்டிகர்: கட்சி சார்பற்ற அமைப்பாக தேசிய எம்எல்எக்கள் (என்எல்சி பாரத்) அமைப்பு உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் புரவலர்கள் மற்றும் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக முன்னாள் மக்களவை சபா நாயகர்கள் சுமித்ரா மகாஜன், மீரா குமார், மனோகர் ஜோஷி, சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இருந்துள்ளனர். இந்த அமைப்பில் நாடு முழுவதிலுள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த என்எல்சி பாரத் அமைப்பின் முதலாவது தேசிய மாநாடு வரும் ஜூன் மாதம் மும்பையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஹரியாணா மாநில சட்டப்பேரவை சபாநாயகர் கியான் சந்த் குப்தா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இந்த என்எல்சி பாரத் அமைப்பின் மாநாட்டுக்கு பல்வேறு மாநில சட்டப்பேரவைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மாநாடு ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறும். எம்ஐடி ஸ்கூல் ஆஃப்கவர்னன்ஸ், அதுல்ய பாரத் நிர்மாண் ஃபவுண்டேஷன், பாரதீயசத்ர சன்சத் ஆகிய அமைப்புகள் மாநாட்டை நடத்தவுள்ளன.
முதன்முறையாக நாடு முழுவதிலும் உள்ள எம்எல்ஏக்கள் ஒரே இடத்தில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். நாட்டில் ஜனநாய கத்தை வலுப்படுத்துவது தொடர் பாகவும், தங்களது பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பஞ்சாப் மாநில சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான், இமாச்சல பிரதேச சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா ஆகியோர் உடன் இருந்தனர்.