

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பழங்குடியினர் சமூகப் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு தலைமையில் அம்மாநிலத்தை சேர்ந்த பல்வேறு பழங்குடியினர் சமூகப் பிரதிநிதிகள் பிரதமரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது அருணாச்சல பிரதேசம் – குஜராத் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து பிரதமர் விவாதித்தார். பகவான் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி அருணாச்சலை சேர்ந்தவர் என நம்பப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பழங்குடியினர் சமூக பிரதிநிதிகளின் சமீபத்திய குஜராத் பயணத்தின் அனுபவங்கள் குறித்தும், குறிப்பாக கெவாடியா மற்றும் கிஃப்ட் நகரத்திற்கு அவர்களின் வருகை குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
முதல்வர் பெருமிதம்: பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகித்த அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு கூறும்போது, “பிரதமருடன் பழங்குடியின தலைவர்கள் கலந்துரையாடுவது இதுவே முதல்முறை. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். அசாம்- அருணாச்சல் இடையிலான எல்லைப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் மத்திய அரசின் உதவியால் தீர்க்கப்பட்டுள்ளன” என்றார்.
கலந்துரையாடலுக்கு தங்களை அழைத்ததற்காக பிரதமருக்கு பிரதிநிதிகள் குழு நன்றி தெரிவித்தது. அருணாச்சல பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தது.
குஜராத்தை பார்த்து வியந்தோம்: பழங்குடியின பிரநிதிகளில் ஒருவரான சவ் சிகாராஜா சவுதாங் கூறும்போது, “இந்த சந்திப்பு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. பிரதமரை சந்தித்தது எங்கள் சொந்த வீட்டுக்கு வந்தது போல் இருந்தது. வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருப்பது போல் நாங்கள் உணரவில்லை. அவர் முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்திற்கு சென்றோம். அங்குள்ள வளர்ச்சியை பார்த்து வியந்தோம். பிரதமர் எப்போதும் தேசத்திற்காக உழைத்து வருகிறார். அது எங்களுக்கு உத்வேகம் தருவதாக உள்ளது” என்றார்.
பிரதிநிதிகள் குழுவை சேர்ந்த நியாரி ரிசோ கூறும்போது, “அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் எடுத்துக் கூறியது எங்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. மாநிலத்தின் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு நாங்கள் அனைவரும் பங்களிக்க விரும்புகிறோம்” என்றார்.