

லக்னோ: உ.பி.யில் தேர்தலுக்கான திடீர் திருமணம் செய்துகொண்ட 45 வயது அரசியல் தலைவரின் மனைவி ராம்பூர் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யின் ராம்பூர் நகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மமூத் ஷா கான். ராம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் பதவி கடைசி நேரத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதையறிந்த மமூத் ஷா கான் இரண்டே நாளில் தனக்கென ஒரு மணப்பெண்ணை தேடிக் கண்டுபிடித்து கடந்த ஏப்ரல் 15-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். மறுநாளே அவரை வேட்பு மனு தாக்கல் செய்யச் செய்தார்.
இதனிடையே மமூத் ஷா, காங்கிரஸை விட்டு விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததால் அக்கட்சி சார்பில் அவரது மனைவி சனா போட்டியிட்டார். இந்நிலையில் 43,121 வாக்குகள் பெற்று சனா வெற்றி பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து பாஜக மற்றும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் முறையே 32,173 மற்றும் 16,273 வாக்குகளுடன் இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானின் கோட்டையாக கருதப்படும் ராம்பூரில் சனா வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
மமூன் ஷாவை திருமணம் செய்த பிறகு சனாவின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறியது. ராம்பூர் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், சில வாரங்களுக்கு முன்பு வரை தனியார் பள்ளி ஆசிரியையாக இருந்தார்.
இதுகுறித்து சனா கூறும்போது, “ரமலான் புனித மாதத்தில் எங்கள் திருமணம் நடைபெற்றது. இது விதிப்படி நடைபெற்றதாகவே கருதுகிறேன். பிரச்சாரத்தின் போது மக்களின் பிரச்சினைகளை என்னால் அருகிலிருந்து பார்க்க முடிந்தது. இப்பிரச்சினைகளை தீர்க்க என்னால் இயன்றவரை பாடுபடுவேன். எனது வெற்றியால் எனது மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்” என்றார்.
மமூன் ஷா கூறும்போது, “மக்களுக்கு நெருக்கடியான நேரத்தில்நான் அவர்களுடன் இருந்ததால் அவர்கள் என்னை விரும்புகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் ஆசம் கானுக்கு மட்டுமே வாக்களித்த மக்கள் இம்முறை எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்றார்.