ரூ.10 லட்சம் நிவாரண விளக்கம் முதல் டி.கே.சிவகுமார் பேட்டி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 16, 2023

ரூ.10 லட்சம் நிவாரண விளக்கம் முதல் டி.கே.சிவகுமார் பேட்டி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 16, 2023
Updated on
3 min read

“அரசியல் பின்புலத்துடன் ஓடுகிறது சாராய ஆறு” - ஐபிஎஸ்: கள்ளச் சாராயம் அருந்தி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த இரண்டு ஆண்டுகளில் எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை. கள்ளச்சாராயம், போலி மதுபானம் விற்கிறவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்குக் காரணம் திமுகவை சேர்ந்தவர்களே. வெளிவந்தன.

கள்ளச்சாராய விற்பனையிலும், போலி மதுபான விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, போலி மதுபான விற்பனை செய்ததால், அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது சாராய ஆறுதான் தமிழகத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

ரூ.10 லட்சம் நிவாரணம் ஏன்? - அமைச்சர் விளக்கம்: "ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை என்பது கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்காக கொடுக்கப்படுவது அல்ல; சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பம் ஏழைக் குடும்பமாக உள்ளது. மீனவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களாக உள்ளனர். எனவேதான், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அதேவேளையில், கள்ளச் சாராய சம்பவங்களைப் பொறுத்தவரையில், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகத்தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாகவும் அரசு உதவித் தொகையை வழங்கி இருக்கலாம் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

இதனிடையே, கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது விஷச் சாராயம்: டிஜிபி: மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல என்றும், தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் சேர்க்கப்பட்ட விஷச் சாராயம் என்றும் காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரக்காணம் மற்றும் சித்தாமூரில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்ற உத்தரவு: போக்குவரத்து துறையில் வேலை வழங்குவது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை: அரசு: "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தமிழக மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் திரையரங்க உரிமையாளர்களே படத்தைத் திரையிடவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது" என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண்ட பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆட்சேர்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கு முடிவு': பிதமர் மோடி செவ்வாய்க்கிழமை நடந்த 'ரோஜ்கார் மேளா'-வில் மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் 0 வழங்கும் விழாவில் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர், "முன்பெல்லாம் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது கடினமானதாக இருந்தது. விண்ணப்பப்படிவத்தைப் பெற மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். மாற்றங்களால் ஊழல், பாரபட்சம் போன்றவை தடுக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

“முதுகில் குத்தமாட்டேன்” - டி.கே.சிவகுமார் பேட்டி: "பதவியை பெறுவதற்காக முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன்" என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் செவ்வாய்க்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி பயணத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவகுமார், "எங்களுடையது ஒற்றுமையான வீடு. இப்போது அதில் 135 உறுப்பினர்கள் இருக்கிறோம்.

“எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நடக்காது...”: கர்நாடகாவைப் போல மகாராஷ்டிராவிலும் வெற்றி பெறும் எதிர்க்கட்சிகளின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று அம்மாநில துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பட்னாவிஸ், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தேசியவாத காங்கிரஸும் உத்தவ் தாக்கரே அணியினரும் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்களால் அதை மட்டும்தான் செய்யமுடியும். மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. மறுபடியும் பாஜக - சிவசேனா கூட்டணியே வெற்றி பெறும்" என்றார்.

சுப்மன் கில்லை பாராட்டிய கோலி: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லை, விராட் கோலி மனதார பாராட்டியுள்ளார். நடப்பு சீசனில் கில், 13 இன்னிங்ஸ் விளையாடி 574 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் அரைசதம் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 48.00. ஸ்ட்ரைக் ரேட் 146.19. இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பையும் கில் வழங்கி வருகிறார். இந்த நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தொடர்ந்து சிறப்பாக ஆடுங்கள்... அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ..” என இளம் வீரரான கில்லை பாராட்டி பதிவிட்டுள்ளார்

0.4% வாக்குகளில் பெரும்பான்மையை தவறவிட்ட அதிபர்: துருக்கியை கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் தய்யீப் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே திங்கள்கிழமை துருக்கியில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர். துருக்கியின் அரசியல் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த சுற்றுத் தேர்தல் துருக்கியில் மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in