

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது. இருந்தாலும் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது.
இருவரும் ‘நீயா? நானா?’ போட்டியில் நிற்கின்றனர். அதன் காரணமாக அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிக்காமல் உள்ளது. தலைநகர் டெல்லியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் என இருவரும் முகாமிட்டுள்ளனர். அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இது மாதிரியான கோஷ்டி பூசல் உருவாவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பலமுறை பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, முதல்வர் யார் என்பதில் குழப்பங்கள் நிலவியுள்ளன. சமயங்களில் காங்கிரஸ் கட்சி தலைமையின் முடிவு அந்தக் கட்சிக்கே பாதகமாகவும் அமைந்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.