

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு 9 முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த எண்ணிக்கை 2013-ம் ஆண்டு 11 ஆக உயர்ந்தது.(காங்கிரஸ் 9, மதச்சார்பற்ற ஜனதாதளம் 2). கர்நாடக சட்டப்பேரவையில் அதிகபட்சமாக கடந்த 1978-ம் ஆண்டுதான் 16 முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் இருந்தனர். ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வராக இருந்த போது கடந்த 1983-ம் ஆண்டுதான் குறைந்தபட்சமாக 2 முஸ்லிம் எம்எல்ஏ.க்கள் மட்டுமே இருந்தனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 14 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியது காங்கிரஸ். அவர்களில் 9 பேர் எம்எல்ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018 தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். தற்போது கூடுதலாக 2 பேர் எம்எல்ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக வாக்காளர்களில் முஸ்லிம்கள் 13 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களின் வாக்குகள் வழக்கமாக காங்கிரஸ் கட்சிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் பிரிந்து செல்லும். ஆனால், இந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் பெருவாரியாக காங்கிரஸ் கட் சிக்கு சென்றுள்ளன. அதனால் தனிப்பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதற்குப் பல காரணங்களை காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த பாஜக அரசு ரத்து செய்தது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. அத்துடன் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. இந்த காரணங்களால் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர் என்று கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சலீம் அகமது கூறுகிறார்.
குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் 23 முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், அவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் ஓவைசி கட்சி சார்பில் 2 பேர் போட்டியிட்டனர். ஆனால், பதிவான மொத்த வாக்குகளில் வெறும் 0.02 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று ஓவைசி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.
பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது. அதன்பின் நடைபெறும் முதல் தேர்தல் கர்நாடகாவில் நடைபெற்றது. இதுவும் முஸ்லிம் வாக்குகள் கணிசமாக காங்கிரஸுக்கு கிடைக்க காரணமாகி இருப்பதாக காங்கிரஸார் கூறுகின்றனர். தவிர ஹிஜாப் விவகாரம், ஹலால் விவகாரம், திப்பு சுல்தான் விவகாரம் போன்றவையும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க காரணமாக அமைந்தன என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.