Last Updated : 11 Oct, 2017 06:33 PM

 

Published : 11 Oct 2017 06:33 PM
Last Updated : 11 Oct 2017 06:33 PM

பாஜகவின் ஆதியும் அந்தமும் அனைவராலும் அறியப்பட வேண்டும்: வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப்

 

பாரதிய ஜனதா கட்சியின் ஆதியையும் அந்தத்தையும் அனைவரும் அறிவது அவசியம் என வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் அழைப்பு விடுத்துள்ளார்.  

உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் ஜனநாயக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆற்றிய சொற்பொழிவில் அவர் பாரதிய ஜனதாவைக் கடுமையாக விமர்சித்தார். 

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாளரான பேராசிரியர் இர்பான் ஹபீப், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவர் ஆவார். அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் சங்கக் கட்டிடத்தில் இந்நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.  

அதில் வரலாற்றுத் துறையில் தகைசால் (Emeritus) பேராசிரியராக அமர்த்தப்பட்டுள்ள இர்பான் ஹபீப், சிறப்பு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்தார். 

இது குறித்து அவர் பேசியதாவது: 

''இன்றைய நிலைக்கு காங்கிரஸ் உட்பட சில அரசியல் கட்சிகள் காரணம் எனப் புகார் கூறப்படுகிறது. இதை நான் ஏற்க முடியாது. ஏனெனில், இதற்கு அனைத்து கட்சிகள் உட்பட நாம் அனைவருமே காரணம் ஆவோம். தற்போது ஆட்சி செய்யும் பாஜகவை பற்றி ஆதி முதல் அந்தம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இவர்களின் தோற்றம் சாவர்கரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது.  

அவரது காலத்தில் பகத்சிங் போன்ற பலரும் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் எய்தினர். ஆனால், மூன்று முறை ஆங்கிலேயரிடம் பிடிப்பட்ட சாவர்கர், எழுத்து மூலம் மூன்று முறையும் மன்னிப்பு கேட்டு விடுதலை பெற்றார். அதில் சாவர்கர், தான் ஆங்கிலேயருக்கு எதிராக எங்கும் செயல்பட மாட்டேன் எனவும் எதிர்ப்புக் குரல் எழுப்ப மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்து பெண்களுக்கு உரிமை கூடாது

ஆர்எஸ்எஸ் நூல்களில், 'ஆங்கிலேயர்கள் தங்கள் எதிரிகள்' என எங்குமே குறிப்புகள் இல்லை. மாறாக, இந்த அமைப்புகள் முஸ்லிம்களைத்தான் தம் எதிரிகளாக கருதுகின்றனர். இந்து மகா சபையின் ஆட்சி முன்னமே இருந்திருந்தால் அவர்கள் சமூகத்திற்கு ஒன்று என பல தனி நாடுகளாக இந்தியாவைக் கூறு போட்டிருப்பார்கள். இந்தியாவை பிரிக்கும் வேலையை அனைவருக்கும் முதலாக பாஜகவின் மூதாதையர் அமைப்பான இந்து மகாசபா துவக்கியது.  

இவர்கள் தான் இந்தியாவில் இரு நாட்டுக் கொள்கைகளை முதன்முதலாகக் கொண்டுவந்தவர்கள். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இவர்கள் பெயர் எங்குமே தென்படாது. அப்படி அவர்களின் பெயர் எங்காவது ஒரு சிறிய இடத்திலாவது இடம் பெற்றிருந்தால் காட்டச் சொல்லுங்கள். 1952-ல் இந்து பெண்களின் உரிமைகளை அதிகரிக்கும் குறிக்கோளை முன் வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டனர். அப்போது இந்து பெண்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாது எனப் பிரச்சாரம் செய்த ஒரே கட்சியாக பாரதிய ஜன் சங் இருந்தது. அதில், தோல்வியும் அடைந்த இந்த கட்சியின் மறு தோற்றமான பாரதிய ஜனதா, இன்று முஸ்லிம் பெண்களின் முத்தலாக் பிரச்சனைக்குக் குரல் கொடுக்கிறது. 

காந்தி கொலைக்கு இனிப்பு

மேலோட்டமாகப் பார்க்கும் போது முஸ்லிம் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கட்சியாக பாஜக தெரியும். ஆனால், இது உண்மையல்ல. கேரளாவில் கொல்லப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அதன் காரணம் கம்யூனிஸ்ட் கட்சியினர் எனப் பாஜக பழி சுமத்துகிறது. பெங்களூருவில் கவுரி லங்கேஷ், மற்றும் எம்.எம்.கல்புர்கி, மகாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகிய நான்கு கொலைகளும் ஒரே பாணியில் நடத்தப்பட்டுள்ளன.  

தலித் அல்லது முஸ்லிம்கள் அல்லாத அந்த 4 பேர் கொல்லப்பட்டதன் காரணம் மட்டும் பாஜகவினருக்கு இதுவரை தெரியாமல் இருப்பது ஏன்? மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட போது அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தவர்கள் இவர்களின் கட்சியினரே. இதை, அவர்கள் உலகின் உயரமான சிலை வைத்துக் கொண்டாடும் சர்தார் வல்லபபாய் படேல் அப்போது கண்டித்திருந்தார். அதில் அவர், 'காந்தியை சுட்டுக் கொன்றது நீங்களா... இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால், அவரது கொலையை இனிப்பு கொடுத்து மகிழ்ந்தது மாபெரும் தவறு' எனக் குறிப்பிட்டிருந்தார். 

தேசியக் கொடியை எரித்தவர்கள்

இந்து தேசத்தை உருவாக்க விரும்பும் ஆர்எஸ்எஸ் தனது சீருடையில் அணியும் காக்கி நிறம் இந்தியாவிற்கானது அல்ல. ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த காக்கி நிறத்தை தனது சீருடையாக அவர்கள் அணியக் காரணம் தன்னையும் ஆங்கிலேயர் போல் காட்டிக் கொள்வதற்காக. இன்று தேசியக்கொடி ஏற்றம் கட்டாயம் எனக் கூறும் இவர்கள் தம்மை தேசியவாதிகள் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.  

ஆனால், அன்று நம் தேசியக்கொடியை அவர்கள் எரித்தார்கள். இந்த உண்மைகளை உங்களைப் போல் படித்தவர்களும், பத்திரிகையாளர்களும் பொதுமக்கள் முன் எடுத்து சொல்வதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது''.  

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x