

காந்திநகர்: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அகில இந்திய ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் 29-வது மாநாடு குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று நடந்தது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆசிரி யர்களிடம் பேசியதாவது: வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தோடு நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. குஜராத் முதல்வராக இருந்தபோது ஆசிரியர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் தேசிய அளவில் கொள்கைகளை உருவாக்க உதவியது.
பெண்கள் பள்ளியில் கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. உலகத் தலைவர்களுக்கு இந்திய ஆசிரியர்கள் மீது நன்மதிப்பு உள்ளது. நான் உலகத் தலைவர்களை சந்திக்கும்போது அவர்கள் தங்களின் இந்திய ஆசிரியர்கள் பற்றி பெருமையாக கூறுகின்றனர்.
முன்பு மாணவர்களுக்கு புத்தக அறிவை மட்டுமே கொடுத்து வந்தோம். ஆனால், புதிய கல்வி கொள்கை அமலாகும்போது, இந்த நிலை மாறும். மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியை, அவர்களின் தாய் மொழியில் வழங்க வேண்டியது அவசியம். இதற்கு புதிய கல்வி கொள்கையில் வழி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ரூ.4,400 கோடியில் திட்டம்: குஜராத்தில் ரூ.4,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். கிப்ட் சிட்டியில் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் நிலவரத்தையும் அவர் பார்வையிட்டார். காந்திநகரில் ரூ.2,450 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதமரின் வீட்டு வசதி திட் டத்தின் கீழ் ரூ.1,950 கோடியில் கட்டப்பட்ட 19,000 வீடுகளின் கிரகபிரவேசம் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார்.
மாணவர்களுக்கு வாழ்த்து: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பாக தேர்வு எழுதியிருக்காலம் என நினைக்கும் மாணவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு தேர்வு மட்டும் உங்களை தீர்மானிப்பதில்லை. உங்களுக்கு பிடித்த துறையில் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம், நீங்கள் ஜொலிக்க முடியும்’’ என கூறியுள்ளார்.