

புதுடெல்லி: “தி கேரளா ஸ்டோரி’’ திரைப்படத்தில் ஒரு சமூக மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல மாநிலங்களில் அதனை திரையிடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. பல அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி மே 5-ம் தேதி நாடு முழுவதும் இத்திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இந்த திரைப்படத்தை திரையிடுவதில் பல்வேறு சிக்கல் நிலவியதையடுத்து அந்த திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்கள் ‘‘தி கேரளா ஸ்டோரி’’ திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் ‘‘தி கேரளா ஸ்டோரி’’திரைப்படத்துக்கு தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து அப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அப்போது நீதிபதிகள் “தி கேரளா ஸ்டோரி’’ திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினை ஏதும் எழவில்லை. மக்களுக்கு ஒரு திரைப்படம் பிடிக்கவில்லையென்றால் அதனை அவர்கள் பார்க்க மாட்டார்கள். நிராகரித்து விடுவார்கள். பின்னர் ஏன் எந்தவித காரணமுமின்றி இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்று அபிஷேக் சிங்வியிடம் கேள்வியெழுப்பினர்.
“உளவுத் துறை தகவலின்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதாலும், பல்வேறு சமூகத்தின் அமைதி குலைக்கப்படலாம் என்பதாலும் மேற்கு வங்க இரசு இந்த முடிவைஎடுத்தது’’ என அபிஷேக் சிங்வி பதிலளித்தார்.
தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு விசாரணையின்போது அமித் ஆனந்த்திவாரி ஆஜரானார். அப்போது, ‘‘தி கேரளா ஸ்டோரி’’ திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தமிழக அரசை நீதிபதிகள் அமர்வு கேட்டுக் கொண்டது.
படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறுகையில், திரைப்படத்துக்கு தடையில்லை. நடைமுறைசிக்கலின் காரணமாகவே திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் வரும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும். அதேபோன்று, மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் ‘‘தி கேரளா ஸ்டோரி’’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் வரும் புதன்கிழமைக்குள் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான நோட்டீஸ் இரு மாநிலஅரசுகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தனர்.