வாரணாசி கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை ‘கார்பன் டேட்டிங்’ செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

வாரணாசி கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை ‘கார்பன் டேட்டிங்’ செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது.

இந்த சூழலில் கியான்வாபி மசூதி சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2021 ஆகஸ்ட் 18-ம் தேதி 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் உண்மையான வயதை கண்டறிய 'கார்பன் டேட்டிங்' ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா விசாரித்து வருகிறார். கடந்த மார்ச் 20-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிவலிங்கத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் 'கார்பன் டேட்டிங்' ஆய்வு நடத்த முடியுமா என்பது குறித்து விரிவான பதில் அளிக்க இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் துறை சார்பில் 52 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவலிங்கத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் ‘கார்பன் டேட்டிங்’ ஆய்வை நடத்த முடியும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா, கியான்வாபி மசூதியில் சிவலிங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ‘கார்பன் டேட்டிங்’ ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in