Published : 23 Jul 2014 08:30 PM
Last Updated : 23 Jul 2014 08:30 PM

நோன்பிருந்த முஸ்லிமுக்கு உணவைத் திணித்த சிவசேனா எம்.பி. மீது 8 போலீஸ் வழக்குகள் உள்ளன

ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரை வற்புறுத்தி சாப்பிட வைத்த சிவசேனா எம்.பி. ராஜன் விகாரே மீது 8 போலீஸ் வழக்குகள் உள்ளன என்று தானே முன்னாள் மேயர் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனை எம்.பி.,க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் சிவசேனை கட்சி எம்.பி.க்கள் கோபத்தில் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை சாப்பிட வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த மேற்பார்வையாளர் ஒரு முஸ்லிம். அவர் ரம்ஜான் நோன்பு மேற்கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.

ரம்ஜான் நோன்பிருந்த ஒரு முஸ்லிமுக்கு உணவை வலுக்கட்டாயமாக சிவசேனா எம்.பி. ராஜன் விகாரே திணித்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டு பெரும் அமளி ஏற்பட்டு, பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் அவரைப்பற்றி தானே முன்னாள் மேயர் கடுமையாகக் கூறியுள்ளார். அதாவது அவர் எப்போதும் மூர்க்கமாகவே நடந்து கொள்பவர் என்றும் அவர் மீது 8 போலீஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் கூறினார்.

அடிதடி வழக்குகள் முதல் அமைதியைக் குலைப்பதான பல வழக்குகள் இவர் மீது உள்ளன. ஆனால் அவரோ பொதுமக்கள் பிரச்சினையைத் தீர்க்கப் போனால் இப்படி வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்று அங்கலாய்த்துள்ளார்.

விகாரே 30 ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவில் சேர்ந்தார். இவர் சிவசேனாவின் ஆக்ரோஷத் தலைவர் ஆனந்த் டீகேயின் வழியைப் பின்பற்றுபவர். மறைந்த ஆனந்த் டீகே தகராறுகளில் சுயநீதி வழங்குவாராம். அவரது பாதையில் வளர்ந்த ராஜன் விகாரே பிறகு படிப்படியாக 'வளர்ந்து’ தானே முனிசிபாலிட்டி மேயரானார்.

விகாரே அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பெயரில் ரூ.9.85 கோடிக்கு சொத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x