

குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படுவோரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இனிமேல் மருந்துகளால் குணப்படுத்தி, காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குச் சென்று விட்ட நோயாளிகளை அவர்களது விருப்பத்தின் பேரில், சட்டப்பூர்வமாக கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ஜே.எஸ்.கேஹர், சலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி, ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நடந்த வழக்குகளில் கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவரை குணப்படுத்த முடியாது, கண்டிப்பாக இறந்து விடுவார் என்று டாக்டர்கள் முடிவு செய்து விட்ட நிலையில், அவரது மரண அவதியைக் குறைக்கும் வகையில் கருணைக் கொலை செய்வதில் தவறில்லை. எனவே, சட்டப்பூர்வமாக இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘கருணைக் கொலை என்பது நோயா ளியின் சம்மதத்துடன் நடந்தாலும், ஒரு வகையில் தற்கொலைதான்.
தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம். தற்கொலைக்கு முயற்சிப் பதும் குற்றம். தற்கொலைக்கு தூண்டு வதும் குற்றம்’ என்று வாதிட்டார்.
அந்தி அர்ஜூனா நியமனம்
இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் அந்தி அர்ஜூனாவை ‘அமைகஸ் குரி’யாக (அறிவுரையாளராக) நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கருணைக் கொலை விஷயத்தில் நாடு முழுவதும் விவாதம் தேவை என்று தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
கருணைக்கொலை தவறில்லை: சிவசங்கரி
கருணைக்கொலை என்ற வார்த்தையே புதிதாக இருந்த 1980-களில் ‘கருணைக்கொலை’ என்ற நாவலை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகியும் கருணைக்கொலை குறித்த விவாதங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன என்கிறார் அவர்.
அவர் மேலும் கூறும்போது, “கருணைக்கொலை என்பது சட்டத்தால் மட்டும் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. அது உணர்வுப்பூர்வமானது. அது தற்கொலையின் இன்னொரு வடிவம் என்று மத்திய அரசு சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. அதே சமயம், நோயின் இறுதி நிலையில் இருக்கிற ஒருவர், அதன் வலியை தாங்க முடியாமல் கருணைக்கொலை முடிவை எடுப்பதில் தவறில்லை.
நான் வாழ்ந்தது போதும், என்னால் இந்த வேதனைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று கதறுகிறவரை, ‘நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்’ என்று நிர்பந்திப்பது நியாயமில்லை. எனவே இதுபோன்ற வழக்குகளில் நான் கருணைக்கொலையை ஆமோதிக்கிறேன்” என்கிறார் சிவசங்கரி.