

குவாஹாட்டி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது குவாஹாட்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அசாமின் குவாஹாட்டி நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘அசாம் பப்ளிக் வோர்க்ஸ்' என்றதன்னார்வ தொண்டு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக அபிஜித் சர்மா பதவி வகிக்கிறார். அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும் என்று அசாம் பப்ளிக் வோர்க்ஸ் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது. இதன்அடிப்படையில் அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய கடந்த 2015-ம் ஆண்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் தொடங்கப்பட்டது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு தலைமை வகித்த பிரதீக் ஹஜேலா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2017-ம் ஆண்டில் அபிஜித் சர்மா குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கை கடந்த 2019-ம் ஆண்டில் விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதீக் ஹஜேலாவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
ரூ.1 கோடி இழப்பீடு: இந்த சூழலில் கடந்த 2021-ம்ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனது சுயசரிதையை வெளியிட்டார்.
இந்த சுயசரிதையில் தனக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் குற்றம் சாட்டி அபிஜித் சர்மா, குவாஹாட்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரியுள்ளார். மேலும் ரஞ்சன் கோகோயின் சுயசரிதை புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரியும் அவர்தனியாக மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணை ஒத்திவைப்பு: இந்த மனுக்களை நேற்று முன்தினம் விசாரித்த குவாஹாட்டி நீதிமன்றம், அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.