பசுவின் கோமியம் இயற்கை உரமாகுமா?- வேளாண் ஆய்வு கவுன்சிலிடம் அறிக்கை கேட்கிறது நிதி ஆயோக்

பசுவின் கோமியம் இயற்கை உரமாகுமா?- வேளாண் ஆய்வு கவுன்சிலிடம் அறிக்கை கேட்கிறது நிதி ஆயோக்
Updated on
1 min read

பசுவின் கோமியத்தை இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டு இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலுக்கு (ஐசிஏஆர்) நிதி ஆயோக் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து 2 மாதத்தில் அறிக்கை அளிக்கும்படி கேட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஐசிஏஆர் ஆய்வாளர்கள் கூறும்போது, “பசு கோமியம் தொடர்பாக மத்திய அரசு விரைவில் ஓர் அறிவிப்பை வெளியிட உள்ளது. இதற்காக, அதன்மீது ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு நிதி ஆயோக்கின் உயர்நிலைக் குழு எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல மாநில அரசுகளால் ஆய்வு நடத்தப்பட்டு, கோமியம் மூலமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயற்கை உரங்கள் தயாரித்து வருகின்றன. எனினும், எங்கள் அறிக்கைக்கு பின் வெளியாவது மத்திய அரசின் முதல் அறிவிப்பாக இருக்கும்” என்றனர்.

நாட்டில் முற்றிலும் இயற்கை உரத்தை பயன்படுத்தும் ஒரே மாநிலமாக சிக்கிம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக பசு கோமியம் இயற்கை உரமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயிர் விளைச்சலுடன் மண்ணின் தரமும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் விளைந்ததாகக் கருதப்படும் 1.24 மில்லியன் டன் பயிர்களில் 80,000 மில்லியன் டன் சிக்கிம் மாநிலத்தில் விளைந்துள்ளது. எனவே பசு கோமியம் மூலம் இயற்கை உரம் தயாரிப்பை ஊக்குவிக்க மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு 30 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.

இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம், மகராஷ்டிரா, குஜராத், மிசோரம் ஆகிய 9 மாநிலங்களில் இயற்கை உரங்கள் மீதான சட்டம் அல்லது கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் கேரளா நடப்பு ஆண்டில் சிக்கிம் மாநிலத்தை போல் 100 சதவீதம் இயற்கை உரங்களை பயன் படுத்தி பயிர்களை விளைவிக்க போவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்துக்கும் பசுவின் கோமியம் அடிப்படையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி ஐஐடியிலும் பசுவின் பயன்கள் மீதான ஆய்வுகள் கேட்டு சுமார் 50 தனியார் மற்றும் மாநில அரசு நிறுவனங்களிடம் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. பசு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு முயற்சிப்பது இது முதன்முறையல்ல. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான ஹர்ஷவர்தன் தலைமையில் பசுவின் அறிவியல் ரீதியான பயன்களை கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் முதல் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in